78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையினர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்ட அவர், பின்னர் அணிவகுத்து வந்த காவல்துறையினர் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின விழா மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினரை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கெளரவப்படுத்தினார்.



இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வழங்கினார். இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இயற்கை வளம், நாட்டுப்பற்று, செம்மொழி, இது எங்கள் பாரதம் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.


சுதந்திர தினவிழாவில், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெளதம் கோயல், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசத்திற்காக உயிர் துறந்த ராணுவ வீரர்கள் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மரியாதை செலுத்தினார். 



இதேபோன்று, நாட்டின் 78வது சுதந்திர தின விழா சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, மாநகராட்சியில் சிறப்பாக அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், சேலம் மாநகராட்சியின் துணை மேயர் சாரதா தேவி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். 


சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.