தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 77வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

 

நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். பின்னர் திறந்த ஈப்பு வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். மேலும் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் வானில் வண்ண பலூன்களை பறக்க விட்டார்.
  



 

இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி பாராட்டினார். சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் 29 பயனாளிகளுக்கு 94 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான அரசு பல்வேறு நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

 

தொடர்ந்து நிகழ்ச்சியில் நாட்டுப்பற்று மிக்க வண்ணமிகு கலை நிகழ்ச்சியில் 750 பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை காட்டினர். தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.