தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி மலை அடிவாரத்தில் வரட்டாறு கட்டப்பட்டுள்ளது. சுமார் 34 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் நீர் தேக்குவதன் மூலம், அச்சல்வாடி, குடும்பியாம்பட்டி, கூக்கடப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடியாம்பட்டி, ஈட்டியம்பட்டி . கம்மாளம்பட்டி, செல்லம்பட்டி, சங்கிலிவாடி உட்பட 15க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் உள்ள 25 க்கு மேற்பட்ட ஏரிகளில் தண்ணீரை சேமித்து, சுமார் 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணைக்கு நீர்வரத்து இன்றி நீர்மட்டம் பத்தடி ஆக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது இதில் சிட்லிங், சித்தேரி போன்ற மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தருமபுரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வள்ளிமதுரை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 120 கன கன அடியாக இருந்து வருகிறது.
தொடர்ந்து இன்று அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வரட்டாற்றில் வெளியேறி வருகிறது. தொடர்ந்து அணை முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறும் காட்சி பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் அணையை கண்டு ரசிக்கின்றனர். மேலும் வரட்டா ஆற்றில் வினடிக்கு 120 கனஅடி தண்ணீர் உபரி நீராக செல்வதால், வள்ளிமதுரை, கெலாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணை நிரம்பிய நிலையில், மழைப் பொழிவு குறைவாக இருந்ததால், டிசம்பர் மாதம் வள்ளிமதுரை அணை நிரம்பியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டம் அரூர் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்துள்ளது.
இதனால் வள்ளி மதுரை பாசன ஏரிகள் முழுவதுமாக நிரம்பி உள்ளது. இதனால் தண்ணீர் வாணியாற்றில் கலந்து, தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. எனவே கடைமடையில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்கின்ற வகையில் கால்வாய்களை தூர்வாரி, கடைமடை வரை தண்ணீர் செல்ல பொதுப்பணித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வள்ளி மதுரை வரட்டாறு அணை பாசன விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.