சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கள்ளப்பாளையம் பகுதியில் நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது, ”தமிழகத்தில் 10 ஆண்டு காலம் அதிமுக அரசு பொற்கால ஆட்சியை தந்தது. கடந்த 2 ஆண்டுகளில் திமுக அரசில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும் நிலை உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரவில்லை. ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக ஆட்சியில் மின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 52 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. மாதந்தோறும் மின்சாரம் கணக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்து விட்டு ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை நிறைவேற்றவில்லை.
மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தினால் மின் கட்டணம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. நகரப் பகுதிகளில் வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு விட்டது. குடிநீர் வரியும் உயர்த்தியுள்ளதுடன் குப்பைக்கும் வரி போட்டுள்ளனர். இதுவரை வீதியில் நடப்பதற்கு மட்டுமே வரி போடவில்லை. விரைவில் அதற்கும் வரி போட்டு விடுவார்கள். அத்தனை வரியையும் போட்டு விட்டு 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர். இதை நாங்கள் சொல்லவில்லை.
திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பழனிவேல் தியாகராஜன் தான் இவ்வாறு சொல்லியுள்ளார். தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் கோடியை செலவிட்டால் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த முடியும். 2 ஆண்டு கால திமுக அரசின் சாதனை 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்துதான். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திறந்து வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் வருகிறார். நாங்கள் பெற்ற குழந்தைக்கு அவர் பெயர் வைக்கிறார். ஒரு வருடம் முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எனக்கு பெயர் கிடைக்கக்கூடாது என்பதற்காக தாமதப்படுத்தி இப்போது திறக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட திட்டங்களைத் தான் முதலமைச்சர் திறந்து வைத்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞருக்கு அரசாங்கப் பணத்தில் நினைவிடம் கட்டியுள்ளார்.
எடப்பாடி அம்மா உணவகத்திற்கு நிதியை குறைத்துவிட்டார்கள். ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் உணவு உண்ணும் திட்டத்திற்கு நிதி இல்லை என்று சொல்லிவிட்டு பேனா சின்னம் வைக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். முதலமைச்சராக இருந்தவருக்கு நினைவு சின்னம் வைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நினைவிடத்தில் வைக்காமல் கடலில் கொண்டு போய் வைப்பதைத்தான் எதிர்க்கிறோம்.
அம்மா உணவக நிதியை குறைக்கிறார்கள். தரமற்ற பொருட்கள் தருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் எடப்பாடி மற்றும் சேலம் மாவட்டத்தில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. புதிதாக கொண்டு வரவில்லை என்றாலும் பரவாயில்லை.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த 100 ஏரிகள் திட்டத்தை முடக்கி விட்டார்கள். ஏழை மக்கள் நிரந்தரமாக விவசாயம் செய்ய ரூ.565 கோடியில் நான் முதலமைச்சராக இருக்கும்போதே தொடக்கி வைத்து விட்டேன். ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அப்படியே நிறுத்தி விட்டார்கள். நிலம் கையகப்படுத்துவது கூட நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் எதைச் செய்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று யோசித்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். அம்மா கிளினிக் என்ற அதிமுக ஆட்சியில் கொண்டு வந்ததை நகர்ப்புற நலவாழ்வு மையம் என்று பெயர் மாற்றி திமுக ஆட்சியில் செயல்படுத்துகிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முடக்கி விட்டார்கள்” என்று தெரிவித்தார்.