தமிழகத்தில் கள்ளச்சார விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசு பதவி விலக வேண்டும் என தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், வேலூர் இப்ராஹிம் மற்றும் பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்தும், தமிழகத்தில் பூரணம் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும், திமுக அரசை பதவி விலக வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.


 


இதில் கண்டன உரையாற்றிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், "தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற அராஜக ஆட்சி. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. ஸ்டாலின் தலைமையில் முதல்வராக நடத்தப்படும் இந்த ஆட்சியில் சாராயத்தின் வருமானத்தை வைத்து மட்டும்தான் அரசாங்கத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடிய ஆட்சி.


கள்ளச்சாராயம்:


இந்த ஆட்சி மூலமாக கொள்ளை அடிப்பதற்கும் நடத்தப்படுகின்ற ஆட்சியாக இருந்த காரணத்தினால், அரசாங்கத்தின் மூலமாக போலி மதுக்களை விற்பனை செய்கின்ற காரணத்தினாலும், அதிக விலையில் விற்பனை செய்வதாலும் போலி மதுவை அரசாங்கமே விற்கும் பொழுது, நாங்கள் ஏன் விற்பனை செய்யக்கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள், திமுகவில் அதிகாரத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் தான் இந்தக் கள்ளச்சாராயம் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.



வருமானம் இல்லாததால் சாராய விற்பனை:


இதுவரை கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் 1412 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகள். திமுக நிர்வாகிகளுக்கு வருமானம் இல்லை, திமுகவில் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் கொள்ளையடித்து அவர்கள் வீடுகளில் கொண்டு போய் சேர்க்கின்றனர். திமுகவில் கீழ் மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளுக்கு வருமானம் இல்லாத காரணத்தினால் அவர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருமானத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். எதிர்கால தீர்வு இந்த ஆட்சியை ஆட்சி கட்டிலில் இருந்து துரத்துவது எப்படி? எவ்வளவு வேகமாக கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமோ அவ்வளவு வேகமாக நமது நாட்டை பாதுகாக்க முடியும்? என்று கூறினார்.



இந்த உணர்வோடு தான் மகளிர் அணி இந்த போரினை முதலில் கொடுத்திருக்கிறார்கள், விரைவில் மகளிர் அணியினர் ஆளுநரை சந்தித்து நேரடியாக இந்த கோரிக்கையை வைக்க உள்ளார்கள். தமிழகம் முழுவதும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி போர் பரணி பாடியுள்ளது. இது தொடரும், இந்த ஆட்சிக்கு எதிராக பெண்கள் எழுப்பப்பட்டுள்ள குரல் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய ஸ்டாலினை மிக விரைவாக ஆட்சி கட்டிலில் இருந்து விரட்டும். விரட்ட வேண்டும்" என்று கூறினார்.