தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தின்னஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட அங்கனாம்புதூர் பகுதியில் 120 குடும்பங்களில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஊருக்குள் செல்லும் பகுதிக்கு சாலை அமைக்காததால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். தொடர்ந்து மழை காலங்களில் சாலை தண்ணீர் தேங்கி, மிகவும் பழுதாகி குண்டும் குழியுமாக, சேரும சகிதமாக இருந்து வருகிறது. தொடர்ந்து மலை காலங்களில் பொதுமக்கள் செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் இடறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.
இதனை அடுத்து பல முறை ஊராட்சியில் தார் சாலை அமைக்கவும் அல்லது கான்கிரீட் சாலை அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாததால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை யாரும் அப்பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் அங்கணம்பட்டி சாலை சேரும், சகதியுமாக உள்ளது. இதனால் மக்கள் சாலையில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சாலையில் செல்ல முடியாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று திடீரென வந்து, .தங்களுக்கு சாலையை சீர் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி, காலையில் கிராமத்தின் வழகயாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள பெண்கள் சேறும் சகதியுமாக உள்ள, சாலையில் பயிர்களை கொண்டு வந்து நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று, விரைவில் பழுதாகி உள்ள அந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை போரட்டத்தில் ஈடுபட்ட மக்கள் களைந்து சென்று, சிறை பிடிக்கபட்ட அரசுப் பேருந்தை பொது மக்கள் விடுவித்தனர். தொடர்ந்து சாலை வசதி கேட்டு கிராம மக்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால், அரசு பேருந்து ஒரு மணி நேரம் கால தாமதமாக சென்றது. இதனால் அருகில் உள்ள கிராமத்திலிருந்து பணி மற்று பள்ளி, கல்லூரிகளுக்கு தருமபுரி செல்லும் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை. தொடர்ந்து சாலை வசதி கேட்டு பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து, சாலையில் நாற்று நட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.