தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்  சுற்றுலா தலம் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த சுற்றுலா தளத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் ஆயில் செய்து அருவிகளில் குளித்தும், பரிசல் பயணம் செய்து அருவிகளின் அழகை கண்டு ரசித்து,  மீன் உணவு சமைத்து உண்டு மகிழ்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் பிரதான அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், வழுக்கும் தன்மையுள்ள பாசிகள் படிந்திருக்கின்றன.



இதனால் சுற்றுலா பயணிகள் தவறி கீழே விழுகின்ற சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் மெயினருவி பகுதிகளில் வழுக்கும் தன்மையுள்ள பாசிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் கிராம தூய்மைப் பணியாளர்கள் மூலம் அருவிக்கு வரும் தண்ணீரை, மண் மூட்டை அடுக்கி திசைதிருப்பி, பிரதான அருவியில் கிருமிநாசினி பவுடரை தெளித்து, பாசிகளை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒரு புறம் சுத்தம் செய்து விட்டு, மறுபுறம் தண்ணீரை அடைத்து விட்டு அந்த பகுதிகளையும் சுத்தம் செய்து வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கும் போது வழுக்கும் தன்மை இல்லாமல் பாதுகாப்பாக குளிக்க முடியும். இந்த தூய்மை பணியினை கூத்தப் பாடி கிராம ஊராட்சியை சேர்ந்த 4 தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.





தருமபுரி மாவட்டத்தில் பச்சை மிளகாய் விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால், விலை குறைந்து ரூ.30-க்கு விற்பனை.



தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பெரும்பாலை, ஏரியூர், சின்னம்பள்ளி, நெருப்பூர்,  காரிமங்கலம், கன்னிப்பட்டி, ஜோதிப்பட்டி, பேகாரஹள்ளி, கம்பைநல்லூர், ஏரியூர், அதகப்பாடி,  உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்துள்ளனர்.




தருமபுரி   மிளகாய்அதிக காரத் தன்மை கொண்டதால், சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அதிகமாக விற்பனைக்கு செல்கிறது. தருமபுரி மாவட்டத்தில்  மிளகாய் விளைச்சல் இல்லாத நேரத்தில், வத்தலகுண்டு, களக்காடு, தேனி போன்ற பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு வருகிறது. 




இந்நிலையில் கடந்த 2 மாதமாக தருமபுரி மாவட்டத்தில், பச்சை மிளகாய் வரத்து குறைவானதால், பச்சை மிளகாய் விலை கிடுகிடுவென உயர்ந்து, கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. மேலும் தொடர்ந்து 2 மாதமாக பச்சை மிளகாய் விலை ரூ.50 முதல் 60 என மாறி மாறி சீரான நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வந்தனர். இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் பச்சை மிளகாய் வரத்து அதிகரிப்பதால், விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த வாரம் வரை கிலோ 50 முதல் 60-க்கு விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் விலை சரிந்தால், வேகவைத்து வத்தல் போட திட்டமிட்டுள்ளனர்.