கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் சேலத்தில் இந்து முன்னணி அமைப்பினர் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோயில் முன்பாக விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். முன்னதாக, முழக்கங்கள் எழுப்பியபடி விநாயகர் சிலை எடுத்துவரப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையாளர் மோகன்ராஜ் தலைமையில் காவல்துறையினர், விநாயகர் சிலையை அகற்றுமாறு இந்து முன்னணி அமைப்பினரிடம் அறிவுறுத்தினர். இதன் காரணமாக இருதரப்பினருக்குமிடையே சிறிது நேரம் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அரசு உத்தரவின்படி சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை காவல்துறையினர் மீண்டும் எடுத்து கூறியதை அடுத்து 'விநாயகர் வாழ்க' கோஷம் எழுப்பியபடி விநாயகர் சிலையை எடுத்துச்சென்றனர். பின்பு அங்கிருந்த ஒரு கடையில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு சென்றனர்.
நேற்று நடந்த கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர், பதில் இன்று நடக்கவிருந்த விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அமைதியான முறையில் தங்கள் வீடுகளில் கொண்டாடும்படி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தடையை மீறினால் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி அபிநவ் கூறியிருந்தார். சேலம் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் அதிகம் கூடும் இடமான சின்னக்கடை வீதி, பெரியக் கடைவீதி, செவ்வாய்பேட்டை, ராஜகணபதி கோவில், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பட்டை கோவில், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அசம்பாவிதம் நடக்காத வகையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் அருள்மிகு ராஜ கணபதி திருக்கோவிலில் காலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை விநாயகர் சதுர்த்தி நிறைவுப் பகுதியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என்று இந்து முன்னணி அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதனால் அங்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.