தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கே.வேட்டர்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கருப்பிலிப்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு அன்றாட தேவைகளுக்கு நகர்ப் புறங்களுக்கு வந்து செல்ல வேண்டும். அதேபோல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கிராமப் புறத்தில் இருந்து பிரதான சாலைக்கு மூன்று கிலோமீட்டர் வந்து நகர் புறங்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் போதிய போக்குவரத்து பேருந்து வசதி இல்லாததால், தினமும் காலை மாலை இருவேளைகளிலும் நான்கு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதே போல் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் காலையில் சிறப்பு வகுப்புகளுக்கு செல்வதற்கு, ஏழு மணிக்கு நடந்து செல்ல வேண்டும். மாலை சிறப்பு வகுப்புகள் முடிந்து வருவதற்கு இரவு நேரம் ஆகிறது. இதனால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்து வருகிறது. 



 

அதேபோல் அருகில் அரசு நடுநிலைப் பள்ளி, கிராமத்தில் இருந்து வருகிறது. ஆனால் அதன் அருகில் வாணியாறு செல்கிறது. இந்நிலையில் அரசு பள்ளிக்கு வருகின்ற பிள்ளைகள் கடந்து வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் தண்ணீர் வருகின்ற காலங்களில் ஆபத்தான முறையில் தண்ணீரில் இறங்கி பள்ளிக்கு வருவதும், அதிகமாக வருகின்ற சூழலில் பள்ளிக்கு வர முடியாமல் நின்று விடுகின்றனர். அதேபோல் கிராமத்தில் உள்ள மக்கள் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு ஆற்றை கடந்து, செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதனால் தண்ணீர் வருகின்ற காலங்களில் இவர்களால் ஆற்றை கடக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. இதனால் சிறு பாலம் அமைத்துக் கொடுத்தால், பேருந்து வசதி இயக்க முடியும். இதனால் கே.வேட்ரப்பட்டி-கீழானூர் வழியாக தீர்த்தமலை செல்வதற்கு வசதியாக இருக்கும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

அதேபோல் இந்த கிராமத்தில் முறையான கழிவுநீர் குடிநீர் வசதி இல்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் அடிக்கடி மின்மோட்டர் பழுதாவதால், இவர்களுக்கு தண்ணீர் கிடைக்காத சூழலும் ஏற்பட்டு வருகிறது. மேலும் கழிவுநீர் கால்வாய் வசதி முற்றிலுமாக இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவுநீர் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அதே சாலையில் சிறியவர்களும், முதியவர்கள் என பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. மேலும் சுகாதாரத் துறையினர் அவ்வப்போது கிரிமினசினி தெளித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் காண சுகாதார வளாகம் கட்டப்பட்டது ஆனால் தண்ணீர் வசதியின்றி பயன்படுத்தப்படாமல் கட்டிடங்களுக்குள் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து பயன்படாமல் இருந்து வருகிறது.



 

கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு மயான வசதி இல்லை. இறப்பவர்களின் உடலை வாணியாற்றில் அடக்கம் செய்வதும், தகனம் செய்வதுமாக இருந்து வருகின்றனர். சில நேரங்களில் மழைக் காலங்களில் தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகின்ற போது, உடலை அடக்கம் செய்ய முடியாமல், கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் நீண்ட நாட்களாக தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் பல்வேறு இடங்களில் மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் அரசு தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. எனவே இந்த கிராமத்திற்கு குடிநீர் வசதி, கழிவு நீர் கால்வாய், மயானம், பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் ஆபத்தான முறையில் தினந்தோறும் நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவிகளுக்காகவும், ஆற்றலை கடந்து வகுப்பு பள்ளிகளுக்கு வரும் சிறுமிகளுக்காகவும் தரைப்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.