சேலம் மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் தங்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தனது கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் படிப்பறிவற்ற பட்டியலின மக்கள் அரசு பணி பெற்ற நிலையில், டி பிரிவு மற்றும் நான்காம் நிலை பணியிடங்களை ரத்து செய்யக்கூடாது. உள்ளாட்சிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் நியமனம் செய்த அனைத்து தூய்மை தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் . 



அனைத்து தூய்மை தொழிலாளர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும். ஆயுள் காப்பீடு விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் ஆகியவற்றை வழங்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் தூய்மை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிகாரிகள் தன்னிச்சையாக செய்த பணியிட மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு கடன் மற்றும் பி.எஃப் ஆகியவற்றில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகள் மீதும் உரிய விசாரணை நடத்த வேண்டும். மோசடி செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதவிலக்கு காலங்களில் பெண் தொழிலாளர் மீது கடுமையான பணிகளை திணிக்க கூடாது. என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் எங்கே உள்ளது அருகே உள்ள திருமணிமுத்தாறு தண்ணீரில் இறங்கி 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பெண் மற்றும் ஆண் பணியாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வரும் தங்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவது இல்லை. தினசரி ஊதியம் என்பது மிகவும் குறைவாக உள்ளது. பலமுறை அதிகாரிகளுக்கு இது தொடர்பாக மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இன்று சேலம் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி வாரம் தோறும் பணியாற்றும் எங்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் வார விடுமுறை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு கடன் மற்றும் பி.எஃப் ஆகியவற்றில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகள் மீதும் உரிய விசாரணை நடத்த வேண்டும். உள்ளாட்சிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் நியமனம் செய்த அனைத்து தூய்மை தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறினார்.


சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சேலம் திருமணிமுத்தாற்றில் ஆற்றில் தூய்மை பணியாளர்கள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தூய்மை பணியாளர்கள் தாங்கள் தூய்மைப்படுத்தும் ஆற்றிலேயே இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.