அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கத்தில் பருத்தி வரத்து குறைந்தது. 500 மூட்டை பருத்தி ரூ.7.50 இலட்சத்திற்கு ஏலம்போனது.

 

தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளி கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது.  இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர். தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஏலத்தில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 201 விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.  இதில் 500 பருத்தி மூட்டை ரூ.7.50 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஆர்சிஎச் பருத்தி குவிண்டால் ரூ.5,150 முதல் 8,409 வரையிலும், விற்பனையானது. மேலும் கடந்த வாரத்தை விட, பருத்தி வரத்து மற்றும் விலையும் குறைந்தது. மேலும் கடந்த சில வாரங்களாக பருத்தி வரத்து கடுமையாக சரிந்து வருகிறது. மேலும் வரும் வாரங்களில் பருத்தி வரத்து குறையவும் வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். 



 

தருமபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு-4825 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.31.22 இலட்சத்திற்கு ஏலம்.

 

தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு  ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர். தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பட்டுக்கூடு வரத்து சரிந்து வந்தது. 

 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற  ஏலத்தில் மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் கொண்டு வரவில்லை. மேலும் 52 விவசாயிகள் கொண்டு வந்த 4825 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம்  ரூ.530-க்கும், அதிகபட்சமாக ரூ.740-க்கும், சராசரியாக 637 ரூபாய் என ஏலம் போனது. மேலும் கடந்த சில நாட்களாக விட,  பட்டுக்கூடு வரத்து அதிகரித்ததும், விலையும் உயர்ந்து விற்பனையானது. கடந்த சனிக்கிழமை 23 விவசாயிகள் எடுத்து வந்த 1179 கிலோ வெண்பட்டுக்கூடுகள் 8 இலட்சத்திற்கு விற்பனையானது.  ஆனால் நேற்று பட்டுக்கூடு வரத்து அதிகரித்து. இதனால் நேற்றை ஏலத்தில் 4825 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.31.22 இலட்சத்திற்கு விற்பனையானது. மேலும் இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.