மொரப்பூர் ரயில் நிலையத்தில் நிலைதடுமாறி விழுந்த காவலர் மீது ரயில் சக்கரம் ஏறியதில் உடல் இரண்டு துண்டாக சிதறியது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலு (36). இவர் 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆயுதப்படை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னையில் உள்ள ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது மொரப்பூர் ரயில் நிலையத்தில் இறங்குவதற்காக ரயிலில் இருந்து கீழே இறங்கும்போது நிலை தடுமாறி விழுந்ததால் காவலர் வேலு, மீது ரயில் சக்கரம் ஏறியதில் உடல் இரண்டாக சிதறி உயிரிழந்தார்.
பின்பு சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த சேலம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறு ஆய்விற்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது இவரோட குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இச்சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியிலிருந்து 18,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், கடந்த ஒரு மாத காலமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்பொழுது மழை முழுவதுமாக குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வினாடிக்கு 6200 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளக்காடாக காட்சியளித்து வந்த காவிரி ஆறு தற்பொழுது படிப்படியாக நீர்வரத்து குறைந்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுற்றுலா பயணிகளுக்கும், பரிசல் பயணத்திற்கும் தடைவித்து வந்த நிலையில் நீர்வரத்து சரிவால் நேற்று காலை முதல் சின்னாறு முதல் கோத்தகக்கல், மெயினருவி வரை பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பிரதான அருவிக்கு செல்கின்ற நடைபாதைகள், பிரதான அருவி, பெண்கள் குளிக்கும் அருவி உள்ளிட்ட இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால் குளிப்பதற்கு தற்பொழுது 40 வது நாளாக தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 18,000 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் சேதம் காரணமாக, குளிப்பதற்கான தடை நீடிப்பதால், காவல் துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக்ணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், நீர்வரத்து படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.