தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை உள்வட்டம், சிட்லிங் ஊராட்சி, வேலனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம்  நடைபெற்றது. இந்த முகாமில் 248 பயனாளிகளுக்கு ரூ.87.55 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கிராம.சாந்தி வழங்கினார்.

 

இதனை தொடர்ந்து விழாவில் பேசிய ஆட்சியர் கிராம.சாந்தி, "மலைவாழ் பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பற்றி நீங்கள் அறிந்து கொண்டு, அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக தான் கடைக்கோடி கிராமமான இந்த மலைக்கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகின்றது.  இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொண்டு அரசின் திட்டங்களை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இங்கு பல்வேறு துறை அலுவலர்கள் அரசின் திட்டங்களையும், அதை பெறுவதற்கான வழிமுறைகளையும் திட்ட விளக்க உரையாக ஆற்றியுள்ளார்கள். அதை நீங்கள் முழுமையாக கேட்டறிந்தால் அரசின் திட்டங்கள் அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொண்டு, தங்களுக்கு தகுதியான திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற முடியும். அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கே பார்த்து அரசின் திட்டங்களை அறிந்துகொள்வது என்பது சிரமம்.  அதற்காக தான் மாதந்தோறும் இதுபோன்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு அதன் முக்கிய நோக்கமாக அரசின் திட்டங்களை பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறுவதும், விண்ணப்பித்த தகுதியான மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதும், அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும். மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் அரசின் திட்டங்களை நீங்கள் அறிந்து, எளிதில் பயன்பெற முடியும். 

 



 

கிராமங்களில் பெண் குழந்தைகள் பருவம் அடைந்த உடனேயே அவர்களை படிக்க வைப்பதை நிறுத்தி விடுவதாக தகவல்கள் வரப்பெறுகின்றன. அவ்வாறு செய்வது மிகவும் தவறானது. ஆண் என்ன, பெண் என்ன அனைவரும் சமம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.  ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் அனைவரையும் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். கல்வி ஒன்றே அழியாத செல்வம். அதை கற்று கொடுப்பது அனைவரின் கடமையாகும். இந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள எஸ்.தாதம்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தங்கி, உணவு, உடை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் படிக்க கூடிய வகையில் உண்டி, உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. அப்பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்த்து கட்டாயம் படிக்க வேண்டும்" என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், அரூர் வட்டாட்சியர் சி.கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.