சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்துறை, வருவாய்த்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களின் குறைகளை எடுத்துரைத்தனர். அப்பொழுது விவசாயிகள் மத்தியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், தமிழகத்தில் பசுமை வனப்பரப்பை அதிகரிக்க அரசு சார்பில் மரக்கன்றுகள் நடும்பனி தொடர்ந்து. சேலம் மாவட்டத்தில் மட்டும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி உள்ளது. இந்த நிலையில் வனத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் உள்ள சுற்றுச்சூழலில் சினிமா விளம்பரங்கள் அரசியல் கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. உடனடியாக அவற்றை அகற்றிவிட்டு துறை சார்ந்த திட்டங்கள் அரசின் இலக்குகள் ஆகியவற்றை சுவர் விளம்பரமாக எழுதிட வேண்டும். அப்பொழுதுதான் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரும் என்று தெரிவித்தார். மேலும் அந்தந்த துறை அலுவலர்கள் அவர்களது அலுவலக சுவர்களில் உள்ள போஸ்டர்களை உடனடியாக அகற்றிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மண்மலை கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கர்சேன் பயோ நேச்சுரல் என்கிற பெயரில் ரசாயன ஆலை கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆலை பயன்பாட்டிற்கு வந்தால் அப்பகுதியில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என கூறி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் கூட்டத்தில் பங்கேற்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்த ஆலையை அனுமதிக்கக் கூடாது என ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு ஆலை கட்டும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாநகராட்சி 50 ஆவது வார்டு பகுதியில் தனியார் ஆயில் மில் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் எண்ணெய் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் திருமணமுத்தாறு ராஜ வாய்க்கால் பகுதியில் விடுவதால் பாசனத்திற்கு நீரை பயன்படுத்தும் பொழுது விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு திருமணிமுத்தாறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிணறுகளில் நீர் மாசடைந்து ஆயில் கலந்த மாறி உள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாமலும் கால்நடைகளுக்கு நீரின்றி விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.
சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உறுதியளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்