தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், அரூர், கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சாரல் மழையால் மாணவிகள் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர்.

 

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே திடீரென அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று காலை முதலிலேயே பெரும்பாலன இடங்களில்  சாரல் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது.  தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகர், பென்னாகரம், நாகதாசம்பட்டி, இண்டூர், நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, கடத்தூர், மொரப்பூர், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் இண்டூர், பென்னாகரம் பகுதியில் மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலும் கடந்த நான்கு நாட்களாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 



 

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.

 

 

 


 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து 9,500 கன அடியாக குறைந்தது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து 35,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பிரதான  அருவிக்கு செல்லும் நடைப்பாதை,  மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்லவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தமிழக கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே பெய்து வரும் கன மழையால்,  நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர் வள அணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.