தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் 'கணபதி தரிசனம் திருவிழா' என்ற பெயரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதில் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவைகளை கைவினை கலைகள் மூலம் பேணிக்காப்பதோடு கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு பல விருதுகளை கொடுத்து ஊக்குவித்து மற்றும் கைவினை கலைகள் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது.
கைவினைக் கலைஞர்கள், பொது மக்களும் பயன்பெறும் வகையில் பண்டிகை காலங்களிலும் மற்றும் விழா காலங்களிலும் பல கண்காட்சிகளை சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'கணபதி தரிசனம்' என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி இன்று 02.09.2021 முதல் 15.09.2021 வரை நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக விநாயகரின் திருவுருவம் கொண்ட களிமண், பஞ்சலோகம், பித்தளை, வாகை மர சிற்பங்கள், சந்தன மரச் சிற்பங்கள் மற்றும் துகள் பொம்மைகள் போன்ற எண்ணற்ற வகையான விநாயகர் சிலைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளனர். களிமண் விநாயகர் அரை அடி முதல் இரண்டரை அடி வரை, பஞ்சலோக விநாயகர், பித்தளை விநாயகர், சித்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர், வெண் மர விநாயகர், சந்தன மர விநாயகர், கருப்பு உலோக விநாயகர், வெள்ளை உலோகம் விநாயகர், மார்பில் துகில் விநாயகர், வெள்ளெருக்கு விநாயகர், சுவரில் பொருத்த கூடிய பித்தளை விநாயகர், கருங்கல் விநாயகர், பச்சைக்கல் விநாயகர், நவதானிய விநாயகர், சன் ஸ்டோன் விநாயகர் போன்ற எண்ணற்ற வகையில் பூஜை பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக் கண்காட்சியில் சுமார் 5 இலட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 150 முதல் 54,000 விலை வரை பலவகை விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. 5,000 வகையான விநாயகர் சிலைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி குறித்து மேலாளர் நரேந்திர போஸ் கூறுகையில், இக்கண்காட்சியில் காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை சேலம் மாநகர மக்கள் வாங்கி தங்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடும், மேலும் இந்த பொம்மைகள் மற்றும் சிலைகளை உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று கூறினார்.