சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நல்லமுறையில் சுமூகமாக நடைபெற்று வருகிறது. கூட்டணி முடிவு எட்டிய பிறகு தலைமை கழகம் சார்பாக முடிவு அறிவிக்கப்படும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் கசப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான மருந்து அதிமுகவுடன் இருப்பதாக காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். இந்திய கூட்டணியில் அதிமுக இணை வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் பதில் கிடைக்கும். திருப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டி பிரதமர் மோடி பேசி இருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.



தூத்துக்குடி ராக்கெட் ஏவுதளத்தில் சீனக்கொடி பயன்படுத்திய குறித்த கேள்விக்கு, அரசு விளம்பரத்தில் இந்தியாவின் கொடி தான் இருக்க வேண்டும். வேற்றுநாட்டின் கொடியிருப்பது நல்லசெய்தியாக பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் உறவில் தான் இருந்தார்கள். தற்போது பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்ததால் தாக்கம் இருக்காது எனவும் பேசினார். பாமக உடனான கூட்டணி உள்ளதா என்பது குறித்து இரண்டு, மூன்று நாட்களுக்குள் நல்ல பதில் தலைமை கழகம் சார்பாக அறிவிக்கப்படும். அதிமுகவின் முக்கிய நல்ல, நல்ல அறிவிப்புகளை அதிமுக பொதுச்செயலாளர் அறிவிப்பார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து மிகப்பெரிய வியூகங்களையும், யூகங்களையும் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது என்றும் கூறினார். ஓபிஎஸ் தரப்பு அதிமுகவை மீட்க வேண்டும் என்று பேசியது குறித்த கேள்விக்கு, அதிமுகவை அதிமுக பொதுச்செயலாளர் மீட்டெடுத்துவிட்டார். மேலும் ஓபிஎஸ் தரப்பிற்கு வேறு வழியே இல்லை. கடைசி வாய்ப்பாக பாஜகவுடன் இணைவது மட்டும் தான் அங்கும் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது என்றார்.