சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள எஸ்.பாலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வீரபாண்டி மேற்கு ஒன்றியம் மற்றும் சேலம் புறநகர் மாவட்டம் அதிமுக நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது, தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்து, தமிழகத்தில் நான்காண்டு காலம் சிறப்பான ஆட்சி நடத்தி, கொரோனா காலத்தில் எளிதாக கையாண்டு எடப்பாடி பழனிசாமி பொதுமக்களை காப்பாற்றினார்.


அவரது தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். நமக்கு ஒரே எதிரி திமுக தான். திமுகவிடமிருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என கூறி அதிமுகவை ஆரம்பித்தவர் நமது தலைவர் எம்ஜிஆர். 35 ஆண்டுகள் நாம் ஆட்சி செய்துள்ளோம். இதற்கு காரணம் தமிழக மக்களின் ஆதரவை பெற்று உள்ளது தான் .



இந்த இயக்கத்தில் மட்டும்தான் சாதாரணமானவரும் பதவிக்கு வர முடியும். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எத்தனையோ சோதனைகளை சந்தித்து இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் என்பது நமக்கான தேர்தல் இல்லை. தேசிய கட்சியுடன் நாம் சேர்ந்து போட்டியிடும்போது பத்து அல்லது பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நமக்கு வருவார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக இருந்தால் தான் நம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முடியும் என அண்ணன் தெரிவித்து தனியே போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் நாம் கிட்டத்தட்ட 21 சதவிகிதம் வாக்கு பெற்று இருந்தோம். திமுக 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு கிடைத்த வெற்றி, வெற்றி அல்ல. ஆனால் சட்டமன்றத் தேர்தல் வரும்போது அதிமுக மகத்தான வெற்றி பெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் ஏதாவது திட்டம் வந்துள்ளதா என பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் தான் நூறு ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று தெரிவித்து விட்டு தகுதியானவர்களுக்கு மட்டுமே என தெரிவித்து தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கிய வருகிறார்கள். இப்போது விலைவாசி உயர்ந்துவிட்டது. மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. வீட்டு வரி உயர்ந்துவிட்டது. சொத்துவரி உயர்ந்துவிட்டு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஒரு குடும்பத்திலிருந்து பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார்கள்.



கஞ்சா எங்கு பார்த்தாலும் விற்கப்படுகிறது. பள்ளி கல்லூரிகள் முன்பாகவும் விற்கப்படுகிறது. இதை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. கஞ்சாவுக்கு அடிமையாகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் இப்படியா நடந்தது. இந்த ஆட்சியின் அவலங்களை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.


அதிமுக ஆட்சியில் எங்காவது கள்ள சாராயம் விபத்து நடந்ததா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூபாய் பத்து லட்சம் ரூபாய் தருகிறார்கள். ஆனால் விவசாயி இறந்து விட்டால் ஒரு லட்சம் ரூபாய் தருகிறார்கள். யாரை இந்த அரசு ஊக்குவிக்கிறது என இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற விவரங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்.


மக்களிடத்தில் எடுத்துச் சொன்னால் மக்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த மூன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகளை அதிமுக பூர்த்தி செய்யும். அதிமுக தொண்டர்களுக்கு மதிப்பு கொடுக்கும் இயக்கம். அதிமுக தொண்டனுக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம் அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தொண்டர்கள் நினைத்து உழைத்தால் அதிமுக ஆட்சி நிச்சயம் வரும்” என்று பேசினார்.