சேலம் மாவட்டம் உடையாபட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியினை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பை பார்வையிட்டார். 


பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது, 2047 இல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு பயணித்து வருகிறது. விண்வளித்துறையிலும் அதற்கேற்றவாறு பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சந்திரயான் மூலம் நிலவுக்கு சென்றது போல, செவ்வாய் கிரகத்திற்கான பயணமும் தொடங்கியுள்ளது. இதேபோல் வியாழன் கிரகத்திற்கான பயணம் 2028 ஆம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 112 நாட்களில் வியாழன் கிரகத்தை அடையும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதித்யா திட்டமும் நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக சந்திரயான் -4 திட்டத்தின் கீழ் நிலவுக்கு சென்று அங்கிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான பிரத்யேக விண்வெளி நிலையம் அமைக்கும் பணி 2028-ம் ஆண்டு தொடங்கி 2035-ம் ஆண்டுக்குள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று 2040ம் ஆண்டில் ககன்யான் திட்டத்தின் கீழ் நிலவுக்கு இந்திய விண்வெளி வீர்ர்களை அனுப்பும் திட்டம் நிறைவேற்றப்படும். இந்த திட்டங்கள் வாயிலாக விண்வெளித் துறையில் 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கு நிச்சயம் நிறைவேறும்.



விண்வெளி ஆராய்ச்சித்துறையில் இஸ்ரோவின் 16 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமல்லாது, நாட்டுமக்களையும் ஈடுபடுத்தும் வகையில் அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதன்மூலம், கல்வி நிறுவனங்கள், தொழிற் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தங்களுடைய பங்களிப்பை செலுத்த முடியும். இந்த வாய்ப்பினை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் நகரப்பகுதியில் உள்ள 25 சதவீத மக்களுக்கு கிடைக்கும் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் கிராமப் பகுதியில் உள்ள மீதமுள்ள 75 சதவீத மக்களுக்கும் கிடைப்பதில் இஸ்ரோவின் திட்டங்கள் பெரிதும் துணை புரிகின்றன சிறு தோல்விகளை கண்டு அஞ்சி விடாமல், இளம் ஆராய்ச்சியாளர்கல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். சந்திரயான் -2 திட்டம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட போது, அத்தோடு இஸ்ரோ விஞ்ஞானிகள் நின்று விட வில்லை. அடுத்த 2 மணி நேரத்தில் இருந்து தங்கள் பணியை மீண்டும் முழுவீச்சில் தொடங்கியதால் தான் சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்தது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேசினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், இவற்றில் ககன்யான், சந்திராயன் 4, இந்தியாவிற்கென விண்வெளி நிலையம் என பல திட்டங்கள் முக்கியமானவை என்றும் தெரிவித்தார். மேலும், 2040 ஆம் ஆண்டில் நிலவில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கால் பதிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.