தருமபுரி மாவட்டம்,  எஸ்.வி.ரோடு பகுதியை சேர்ந்த  சின்னசாமி என்பவர் வனத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தொடர்ந்து ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். தொடர்ந்து சின்னசாமி கடந்த 2007 ஆண்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அந்த குடும்ப ஓய்வூதியம் அவரது மனைவி சென்னாம்மாள் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு சென்னம்மாவும் இறந்து விட்டார். தொடர்ந்து இந்த ஓய்வூதியத்தை மகள் சாந்திக்கு கணவர் இல்லாததால், தாய் வாங்கி வந்த குடும் ஓய்வூதியத்தை மகள் சாந்தி பெயருக்கு மாற்ற  அவரது உறவினர் முருகன் என்பவர்,  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். மேலும்  3 ஆண்டுகள்  ஓய்வு ஊதிய நிலுவை தொகை பெறவும் விண்ணப்பித்துள்ளார். 

 



 

அப்போது அங்கு இளநிலை உதவியாளராக பணியாற்றும் பழனிசாமி என்பவர் ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சாந்தியின் உறவினர்  முருகன், தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறையினரிகம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆலோசனைப்படி முருகன் வன அலுவலகத்திற்கு சென்று இளநிலை உதவியாளர் பழனிசாமியிடம் லஞ்சப்பணம் கொடு‌த்து‌ள்ளா‌ர். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் லஞ்சம் வாங்கும் போது பழனிசாமியை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து அவரிடமிருந்த 34,410 ரூபாயை பறிமுதல் செய்து  நான்கு மணி நேர விசாரணைக்கு   பிறகு அவரை, இலஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். தொடர்ந்து வன கோட்ட அலுவலகத்தில், அதிகாரி இலஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 



 

சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம் 

 

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த  புது கொக்கராப்பட்டி பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்று ஆங்காங்கே சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாலை வசதியை ஏற்படுத்தி, சாக்கடை கால்வாய் அமைத்திருந்தால், இதுபோன்று நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்திய பின்பு இரண்டு ஆண்டுகள் மட்டுமே குடிநீர் தங்கள் பகுதிக்கு வந்த நிலையில் தற்போது வரை தண்ணீரை விலைக்கு வாங்கி உபயோகப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் மண் சுவற்றில் வீடு கட்டி வாழ்ந்து வரும் நிலையில் மழை காலம் என்பதால் மண் சுவற்றில் தண்ணீர் ஊரி ஒரு பகுதி இடிந்து விழுகின்றன. எனவே இக் கிராமத்தில் சாலை, குடிநீர், வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி, குடியிருப்புகளின் முன்பு சேறும் சகதியுமான இடத்தில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.