தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கிராமப் புறங்களில் நுழைந்து விவசாய பயிர்களை அழித்து வந்த, யானையை மயக்க ஊசி செலுத்தி வனத் துறையினர் பிடித்தனர்.

 

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது. கடந்த சில மாதங்களாக பாலக்கோடு பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, இண்டூர், பாலக்கோடு, சோமனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது. வனப்பகுதியை இந்த யானை கூட்டம் வனப்பகுதியை விட்டு கிராமப்புறங்களுக்குள் நுழைந்து விவசாய நிலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டு வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. ஆனால் நான்கு, ஐந்து மாதங்களாக இரண்டு யானை பிரிந்து வனப் பகுதிக்குள் செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் மாவட்ட வனத்துறை மூலம் இந்த ஒற்றை யானையை விரட்டுவதற்கு வேட்டை தடுப்பு வன காவலர்களைக் கொண்டு வனப் பகுதிக்குள் விரட்டி அடிப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அந்த யானை வனப் பகுதிக்குள் செல்லவில்லை தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திக் கொண்டே வந்தது. இந்த யானைகளை விரட்ட வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி விவசாயிகளும், அரசியல் கட்சி அமைப்புகளும்  போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தனர்.



 

தொடர்ந்து வனத் துறையினரிடம் சிக்காமல், விவசாயிகளுக்கும் வனத் துறையினருக்கும் போக்கு காட்டி வரும் யானையை, விரட்ட  கோயமுத்தூர் மாவட்டம் ஆனைமலை வனப் பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்கின்ற கும்கி யானை, தருமபுரி மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்களாக யானை நடமாட்டத்தினை வனத் துறையினர் கண்காணித்து வந்தனர். தொடர்ந்து இன்று (நேற்று) பாலக்கோடு அடுத்த பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத் துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்கள் கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தினர். இதில் ஒரு யானை வனப் பகுதிக்கு சென்றது. மக்னா யானை மட்டும் வனத் துறையினர் பிடித்தனர். தொடர்ந்து பிடிப்பட்டுள்ள மக்னா யானையை ஆனைமலை முகாமிற்கு கொண்டு செல்ல வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.  கடந்த நான்கு, ஐந்து  மாத காலமாக விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்து, சேதம் செய்து வந்த ஒரு யானையை பிடித்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு யானை வனப் பகுதிக்குள் சென்றுள்ளது. அது மீண்டும் கிராமங்களுக்கு நுழையும். எனவே அதனையும் பிடிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.