தருமபுரியில் ஷவர்மா, க்ரில் சிக்கன் விற்பனை செய்யும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலாவதியான உணவு பொருட்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்த பழைய இறைச்சி, மீன்கள் அழிக்கப்பட்டு 6 கடைகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

 

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்ததும், உடல் நலன் பாதிக்கப்பட்டு நாற்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவத்தை தொடர்ந்து, தருமபுரியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் உணவகங்ளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



 

தருமபுரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள, உணவகங்கள், துரித உணகங்களில் திடீரென உள்ளே நுழைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இறைச்சிகள் தயார் செய்யப்படுகிறதா, சமையலுக்கு பயன்படுத்தப்படும் இறைச்சி தரமானதாக உள்ளதா, கெட்டுப்போன இறைச்சி எதாவது பயன்படுத்தப்படுகிறதா, இதே போல சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை மற்றும் செயற்கை நிறமிகள் உள்ளிட்டவைகளயும் அதிகாரிகள் பரிசோதித்து ஆய்வினை மேற்கொண்டனர். மேலும் ஷவர்மா தயாரிக்கப்படுகிறதா அதன் ஷவர்மா தயாரிக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



 

அப்பொழுது உணவு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவகங்களில் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால், சம்மந்தப்பட்ட உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உணவகங்களில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பழைய மீன்கள், இறைச்சி, சமைத்த உணவுகள், நிறமிகள் உள்ளிட்டவறை அழித்தனர். மேலும் விதிமுறைகளை பின்பற்றாமல், பழைய இறைச்சி, மீன் உள்ளிட்டவைகள் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதமும், சுகாதாரமற்ற முறையில் பொருட்களை வைத்திருந்த 6 கடைகளுக்கு தலா ரூ.1,000 என ரூ.10,000 அபராதம் விதித்தனர்.



 

மேலும் உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் இருந்தாலோ, சமைத்த பழைய உணவுகள், இறைச்சி, மீன் மற்றும் இரண்டு நாட்களான சமைக்காத இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை குளிர்சாதன பெட்டியில் இருப்பு வைத்திருந்தாலோ கடைக்கு சீல் வைக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் காய்கறிகள், பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை புதிதாக வாங்கி பயன்படுத்த வேண்டும். இந்த சோதனை என்பது அடிக்கடி நடைபெறும், ஒரு முறை அபராதம் விதித்த கடைகள் மற்றும் உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில், மீண்டும் உணவு மற்றும் பொருட்கள் இருப்பது சோதனையில் தெரிய வந்தால் உடனடியாக கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். தருமபுரி மாவட்டத்தில் இந்த சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தொடர்ந்து மாலை நேர உணவகங்கள், மற்றும் துரித உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளபடும் என் அதிகாரிகள் தெரிவித்தனர்.