காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4வது நாளாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தால், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்றைய மாலை நிலவரப்படி வினாடிக்கு 18,000 கன அடி காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு தண்ணீர் அதிகரித்து வருகிறது.



 

இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 4000 கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து. தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 8000, 10,000, 12,500, 14,000 கன அடியானது. மேலும் நேற்று காலை வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில்  தொடர்ந்து 4-வது நாளாக இன்று காலை மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 15,000 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது.

 

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், இன்று 4-வது நாளாக பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, வினாடிக்கு 20,000 கன அடியாக உயர்ந்தால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு முழுவதுமாக தடை விதிக்க வாய்ப்பு உள்ளது. தொடர் நீர்வரத்தால் ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து தொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக காவிரி கரையோரம் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.