சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 2016 மீனவர்கள் உரிமம் பெற்று மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 45 லட்சம் மீன் குஞ்சுகள் மேட்டூர் அணையில் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த மீன்களை உரிமம் பெற்ற மீனவர்களை கொண்டு பிடிக்கப்பட்டு மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கி காணப்படுவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தங்கமாபுரி பட்டினம், மாதையன் குட்டை, நாட்டாமங்கலம், காவேரி கிராஸ் ஆகிய நீர் தேக்க பகுதிகளில் கரையின் இருபுறங்களிலும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. தண்ணீர் மாசடைந்து காணப்படுவதால் இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிய வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறந்து போன மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், நீர் மாதிரியை சேகரித்து மீன்கள் இறப்புக்கான காரணத்தை கண்டறிய சேலம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இதனை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு மீன்களின் இறப்புக்கான காரணத்தை கண்டறியப்பட உள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் இருந்து திறக்கப்படும் கழிவு நீரால் காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டும் அதேபோல கர்நாடகா மாநிலத்தில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரில் கழிவு நீர் கலந்தது தான் மீன்கள் இறப்பிற்கு காரணம் என மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.