சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 25 வது ஆண்டு நிறைவுநாள் வெள்ளிவிழா மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள்-சமூகநீதி நாள் நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது மாணவர்கள் இடையே உரையாற்றிய தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் பொன்முடி சாதாரணமானவர் இல்லை. சட்டப்பேரவையில் கேள்விகள் கேட்பார்கள். துணைக் கேள்விகள் நிறைய இருக்கும். எல்லோருக்கும் துணைக் கேள்விகள் கொடுத்து விட முடியாது. மாநிலம் முழுவதும் இருந்து எந்த கோணத்தில் இருந்து கேட்டாலும் சரியான பதிலைச் சொல்லக்கூடிய அமைச்சராக பொன்முடி செயல்படுகிறார். கேள்வி நேரத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அமைச்சர் பொன்முடிக்கு வாய்ப்பு கொடுப்பேன். அந்த அளவிற்கு சட்டமன்றத்தில் அமைச்சர் பொன்முடி சிறப்பாக பணியாற்றி வருகிறார். எதையும் எதிர்பாராமல் சட்டப்பேரவையில் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு களத்தில் இறங்கி பதில் அளிப்பவராக உள்ளார். பெரியாரைப் பற்றி பேசிவிட முடியாது. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறாத நான் பேசலாமா எனத் தெரியவில்லை. உங்களிடம் கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன்.
பெரியாரை கடவுள் மறுப்பாளர் என்ற ஒற்றைச் சொல்லோடு கடந்து விடுகிறார்கள். கடவுளுக்கும் அவருக்கு எந்த சண்டையும் கிடையாது. பிரச்சினையும் கிடையாது. கடவுள் பெயரால் மனிதர்களை இழிவு படுத்துபவர்களை மட்டுமே எதிர்த்தார் தந்தை பெரியார். மற்ற எல்லோரையும் விட கடவுளோடு எந்த பிரச்சினையும் இல்லாத ஒரே மனிதர் பெரியார்தான். வைக்கம் பகுதியில் உழைக்கும் மக்கள் ஜாதியின் பெயரால் பாதிக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்ட போது, தட்டிக் கேட்க நாதியில்லாமல் இருந்தபோது, ஈரோட்டில் இருந்து சென்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு எதிராக போராடினார். இது கடவுளுக்கு எதிரான போராட்டம் இல்லை. கடவுளின் பெயரால் இழிவு படுத்துபவர்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். பெரியார் கைது செய்யப்பட்ட பிறகு அவரது மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் தொடர்ந்து போராடினர். 141 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு உழைக்கும் மக்களின் உரிமை மீட்கப்பட்டது.
குடும்ப அரசியல் சொல்கிறார்கள். முதல்வராக கலைஞர் இருந்தபோது, இன்றைய முதல்வர் ஸ்டாலின் நெருக்கடி நிலையின் போது கைது செய்யப்பட்டு கடும் சித்ரவதைக்கு ஆளானார். முதல் குடும்பமாக சமுதாயத்திற்கு குரல் கொடுக்கும் இயக்கம் திராவிட மாடல் ஆட்சி. மனித குலத்திற்காக குரல் கொடுத்து இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவர் பெரியார். நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபோது இளம் விதவைகள் கணக்கெடுக்கப்பட்டு 11,342 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதிற்குட்பட்டவர்கள். சனாதன தர்மம் 5 வயதிற்குள்பட்டவர்களை விதவையாக வைத்திருந்தது. இந்நிலையை மாற்ற போராடியவர் தந்தை பெரியார். இது கடவுள் மறுப்பு இல்லை. பெரியார் பற்றிய தவறான பிம்பத்தை இளைஞர்கள் மாற்றியமைக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சமூக நீதி பாடத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. அதை மாற்றியமைக்க வேண்டும்.
ஜாதியை ஒழிக்க பாடுபட்டவரை கடவுள் மறுப்பாளர் என கூறுவது தவறு. கலைஞர் படித்து முடித்து பின் திருமணம் செய்தால் உதவித் தொகை வழங்கினார். பெண் கல்வியை ஊக்குவிக்க தாயைப் போல கலைஞர் செயல்பட்டதால் உயர்கல்வி சதவீதம் உயர்ந்துள்ளது. சமூக நீதியை நிலைநாட்டுவது போல கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். இடஒதுக்கீடு எப்படி வந்தது என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்த பிறகு பெரியார், அண்ணா மிகப்பெரிய போராட்டத்தை தமிழகத்தில் நடத்தினர். தந்தை பெரியார் இல்லையென்றால் இடஒதுக்கீடு வந்திருக்காது. பல சமூகங்களை உள்ளடக்கி கலைஞர் இடஒதுக்கீடு வழங்கினார். தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கலைஞர் ஒருவருக்கு மட்டுமே பாராட்டு விழா நடத்தினார். அதற்கும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்ற சவால் ஏற்பட்டது. 8 லட்ச ரூபாய்க்கு ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்றால் நியாயமா. 5 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துபவர்களின் பிள்ளைக்கு முன்னுரிமையா, சாமான்யர்கள் குடும்பத்து பிள்ளைக்கு முன்னுரிமையா என்ற விவாதம் உள்ளது .
மகாத்மா காந்தியை கொன்றவருக்கு கோவில் கட்டப்படுகிறது. இது மனவேதனையைத் தருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இளைஞர்களுக்கு உண்மை தெரியவேண்டும். 1996-ல் டைடல் பார்க், சிறுசேரியில் தொழில்நுட்ப பூங்கா கலைஞர் கொண்டு வந்தார். தமிழக இளைஞர்கள் உலக அளவில் தகவல் தொழில் நுட்ப உலகில் சாதிக்க கலைஞர் எடுத்த நடவடிக்கைகளே காரணம். தமிழுக்கு மென்பொருள் அமைத்து உலக மொழிகளுடன் ஒருங்கிணைப்பு செய்ததற்கு கலைஞரே காரணம். இன்றைய முதல்வர் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காகிதமில்லா பட்ஜெட் தந்துள்ளார். அதோடு நின்று விடவில்லை. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் தந்து கொண்டுள்ளார். அறிவியல் தொழில்நுட்பம் மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் செயல்படுகிறார்.