ஆண்டு முழுவதும் நிரந்தர விலை கிடைக்க தக்காளியை நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்ய ஓசூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், கோஸ், கேரட், கீரை, தக்காளி போன்ற காய்கறி பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக ஓசூரில் விளையும் தக்காளி போன்ற காய்கறிகள் தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் தினமும் விற்பனைக்கு அனுப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் தக்காளியில் நோய் தாக்கம் மற்றும் உரிய விலை இல்லாததால், தக்காளி சாகுபடியில் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைந்ததால் 5 சதவீதம் தக்காளி மட்டும் உற்பத்தி செய்யப்பட்டது. இதே போல் வெளி மாநிலங்ளிலும் மழையின் காரணமாக தக்காளி விவசாயம் பாதிக்கப்பட்டதால் தக்காளியின் விலை வரலாறு காணத அளவிற்கு அதிகபட்சமாக ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளி தோட்டங்களுக்கு விவசாயிகள் இரவு பகலாக காவல் இருந்து தக்காளி சாகுபடி செய்து விற்பனை செய்தனர். அப்போது தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுகள் அதிக லாபம் ஈட்டி வந்தனர்.
தொடர்ந்து தக்காளி விலை குறையாததால், விலையை கட்டுப்படுத்தி தோட்டக்கலைதுறையினர் விவசாயிகளுக்கு இலவச தக்காளி நாற்று வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தினர். விவசாயிகளுக்கு தக்காளி விலை உயர்ந்ததால் தக்காளி விவசாயத்தில் மீண்டும் ஆர்வம் காட்டினர். இதனால் தக்காளி மீண்டும் விளைந்து விலையும் படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் வெளி மாநில தக்காளி வரத்தும் தொடங்கியது. ஓசூர் பகுதியில் தற்போது 85 சதவீதம் தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளதால், கடந்த இரு தினங்களாக ரூ.12க்கு விற்பனை செய்த நிலையில் நேற்று ரூ.6 முதல் ரூ.8க்கு விற்பனை செய்தது. தக்காளி விலை வீழ்ச்சியாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது, “தக்காளிக்கு நிரந்தர விலை இல்லாததாலும் நோய் தாக்கம் காரணமாக அடிக்கடி தக்காளியில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. அதே போல் கடந்த 6 மாதங்களுக்கு முன் தக்காளி விலை வீழ்ச்சியால், முற்றிலும் உற்பத்தி குறைந்ததால் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டதால் தமிழக அரசு நியாயவிலைக்கடைகளில் விலை நிர்ணயம் செய்து தக்காளி விற்பனை செய்தனர். பின்னர் தக்காளி உற்பத்தியை அதிகரித்து, விலையை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு இலவச நாற்று வழங்கினர். தற்போது தக்காளி 85 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால், வியாபாரிகள் தங்களிடம் ஒரு கிலோ தக்காளி ரூ.3-க்கு கொள்முதல் செய்து வெளி மார்க்கெட்டில் ரூ.5 முதல் 10 வரை விற்பனை செய்கின்றனர். இதனால் மீண்டும் தக்காளியில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு தக்காளி விலை குறையும் போது, உரிய விலை நிர்ணயம் செய்து நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.