பாலக்கோடு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் வாடிக்கையாளர் அத்துமீறி நுழைந்து வருவாய் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் நடத்தினார். காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மின் ஊழியர் புகார் கூறியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாஸ் சாலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் உதவி மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பாலகோடு நகரப் பிரிவில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின் இணைப்புகளின் மாதாந்திர மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இதே போல் கடந்த வெள்ளிக் கிழமை 7 ம் தேதி பாலக்கோடு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளர் சசிகுமார் மின் கட்டண வசூல் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அலுவலகத்திற்கு வந்த வாடிக்கையாளர் திடீரென அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து, சசிகுமாரிடம் தண்டுகாரணஅள்ளி பகுதியில் என்னுடைய வீடு உள்ளது என்றும், என்னுடைய வீட்டிற்கு அதிகப்படியாக மின் கட்டணம் வந்து உள்ளது என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஏஇ எங்கே என்று கேட்டுள்ளார். ஏஇ உள்ளே இருப்பார் என்று சசிகுமார் கூறியுள்ளார். பிறகு மீண்டும் திரும்பி வந்து ஏஇ உள்ளே இல்லை. ஏன் இதை முன்கூட்டியே என்னிடம் தெரிவிக்கவில்லை என்று ஒருமையில் பேசி உள்ளார்.
அப்போது சசிகுமார் ஏஇ வெளியில் சென்றது எங்களுக்கு தெரியாது. மேலும் எங்களுடைய உதவி மின் பொறியாளர் பகிர்மான அலுவலகத்திற்கு, பாலக்கோடு நகரப் பிரிவு பகுதிகள் மட்டும் தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும். உங்களுடைய பகுதி எங்கள் அலுவலகத்திற்கு வருவதில்லை நீங்கள் வந்து மைல்கல் அலுவலகத்தில் சென்று கேளுங்கள் எனக் கூறியுள்ளார். அப்பொழுது சசிகுமாரை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி, அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்த வரை தாக்கியுள்ளார். மேலும் அவரே மொபைல் வீடியோ எடுத்து, உன்னை பார்த்துக் கொள்கிறேன் என்று மிரட்டியுள்ளார். தொடர்ந்து வாடிக்கையாளர் வெளியில் சென்று பின், வருவாய் மேற்பார்வையாளர் சசிகுமார் பாலகோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனையடுத்து புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்யததில் அவர் வினாயகமூர்தி என்பதும், இவர் நமது கிராம சபை இயக்கம் நடத்தி வருவதாகவும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து சசிகுமார் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் காவல் துறையினர் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்துள்ளனர். எனவே அலுவலகத்தில் அரசு பணியில் இருந்த என்னை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி திட்டியது மட்டுமல்லாமல், என் மீது கொலை வெறி தாக்குதலில் நடத்தியவர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எடுக்காத பட்சத்தில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பது மட்டுமல்லாமல் மின்சார ஊழியர்கள் சங்கத்தில் கலந்து பேசி போராட்டத்தில் ஈடுபடுவதாக சசிகுமார் தெரிவித்தார்.