Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்வு... நாமக்கல்லில் ஒரு முட்டை விலை எவ்வளவு?

ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ₹5.90 ஆக நிர்ணயம் செய்தார். நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில இதுவே அதிகபட்ச விலையாகும்.

Continues below advertisement

 

Continues below advertisement

நாமக்கல் மண்டலத்தில் 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் சுமார் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. தினமும் 6.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. தமிழகம், கேரளாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் தினமும் லாரிகள் மூலம் நாமக்கல்லில் இருந்து சுமார் 4 கோடி முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு வாரம் 4 கோடி முட்டைகள் செல்கிறது. வெளி நாடுகளுக்கு தினமும் 25 லட்சம் முட்டைகள் கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் உள்ள பண்ணைகளில் உற்பத்தியாகும் 52 கிராம் எடை கொண்ட பெரிய முட்டைக்கு என்இசிசி (தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு) தினமும் விலை நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக முட்டை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ₹5.90 ஆக நிர்ணயம் செய்தார்.

நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில இதுவே அதிக பட்ச விலையாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ஒரு முட்டையின் விலை ரூ. 585 காசாக இருந்தது. அதற்கு பின்பு நேற்று (3ம் தேதி) ஒரு நாள் மட்டும் முட்டையின் விலை ரூ.585 காசாக இருந்தது. தற்போது, முட்டையின் பண்ணை கொள் முதல் விலை 590 காசாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "பொதுவாக குளிர்காலங்களான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முட்டையின் நுகர்வு அதிகரிக்கும். தற்போது, வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் முட்டை விற்பனை 2 மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணைகளிலும் ஒரு நாள் முட்டை கூட இருப்பு இல்லை. தினமும் பண்ணைகளில் சேகரிக்கப்படும் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதால், முட்டை விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், முட்டை வியாபாரிகள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

இது மட்டுமின்றி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி வருவதால், கேக் தயாரிப்பதற்காகவும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 440 காசாக இருந்தது. அதன் பின்பு தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஐதராபாத் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 610 காசுகள் வரை உயர்ந்துள்ளது. அதனை பின்பற்றியும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தேசிய கறிக் கோழி ஒருங்கிணைப்பு குழு நேற்று கறிக்கோழி விலையில் ரூ. 4 உயர்த்தியுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ. 94 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement