அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து இன்று சேலம் வந்தார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் திரளான நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கடந்த 60 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார். 



அதிமுக ஆட்சியிலேயே 85 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் திமுக ஆட்சியில் மெத்தனமாக இப்பணிகள் நடைபெற்று வந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் இப்பணி முடிவடைந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஏற்பாட்டில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் பயன்பெறக்கூடிய விவசாயிகளான குளம், குட்டை நீர் நிரப்ப கோறும் இயக்கத்தின் பொதுச் செயலாளர் டி.கே.பெரியசாமி, பொருளாளர் எஸ்எம்ஆர். நடராஜன், அத்திக்கடவு அவினாசி திட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் வெள்ளியங்கிரி, தே.ம.சுப்பு, கணேசன் உள்பட நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நேரில் சந்தித்து அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.


பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் வறட்சி நிறைந்த பகுதி என்பதால் அத்திக்கடவு அவினாசி திட்டம் கொண்டு வரவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நானே நேரடியாக அடிக்கல் நாட்டி வைத்தேன். வேகமாக இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டு தேவையான நீர், குளம் குட்டைகளில் நிரப்பி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வேளாண் பணி நடைபெறும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்று உறுதி அளித்திருந்தேன். அதிமுக அரசு முதற்கட்டமாக மாநில நிதியாக ரூபாய் 1652 கோடி நிதி ஒதுக்கிருந்தது.



கொரோனா காலத்தில் ஒரு ஆண்டு இந்த பணி தொய்வு ஏற்பட்டது. அப்போது அதிமுக ஆட்சியில் 85 சதவீதம் பணி நிறைவடைந்து இருந்தது. திமுக ஆட்சி வந்தவுடன் மீதிப்பணி 15 சதவீதம் ஆமை வேகத்தில் நடந்து முடிந்து தற்போது திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரலாற்று சாதனை திட்டம். ஏழை எளிய விவசாய மக்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சி அளித்துள்ளது. போராட்டக் குழுவினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.


இந்த திட்டம்போல் 100 ஏரி திட்டம் நடந்து வருகிறது. நாங்கள் குரல் கொடுத்தால் நான்கு ஏரிகளுக்கு தண்ணீர் விடுகிறார்கள். மற்ற ஏரிகளுக்கும் தண்ணீர் விட வேண்டும். வேகமாக இந்த பணி நடக்க தேவையான நிதி ஒதுக்கவேண்டும் என்றும் அதிமுக கொண்டு வந்த திட்டம் என கருதாமல் நிதி ஒதுக்கி திட்டத்தை முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என கூறினார். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் என கேட்டதற்கு. தற்போது இது சோதனை ஓட்டம் தான். மாதிரி ஓட்டம் தான் சரி செய்யப்பட்டு விடும் எந்தெந்த இடங்களில் சரிசெய்ய வேண்டுமோ அந்த இந்த இடங்களில் உடனடியாக சரி செய்யப்படும் இந்த திட்டம் சிறந்த திட்டம் என்றும் தெரிவித்தார்.