சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள சூரியூர் கிராமம் பகுதியில் கடந்த மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த பொதுமக்கள் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்த பகுதி வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறி அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். சூரியூர் கிராமம் வருவாய்த் துறை பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் சூரியூர் கிராமம் வருவாய் கிராமம் என்றும், வனத்துறைக்கு சொந்தமானது அல்ல என்று நீதிமன்றம் மூலமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும், அந்த இடத்தை இவர்களுக்கு ஒப்படைக்காமல் மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு கூறிவந்தனர். இந்த நிலையில், சூரிய கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்தனர். தங்களுடைய வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்ட காரணத்தால், ஒவ்வொருவரும் எங்கு செல்வது என்று தெரியாமல் உறவினர் வீடுகளிலும், சாலை ஓரங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர் . 



பல முறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகளாக இருந்து எந்த ஒரு வாழ்வாதாரமும் இல்லாமல் தற்போது வீதிக்கு வந்துள்ளதால், தன்மானத்தை விட்டு வாழ முடியாது என்ற காரணத்தால், தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்களில் அகதிகளாக தஞ்சமடைய கேரளா , கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில முதல்வர்களிடம் அனுமதி கேட்டு மனு அனுப்பி இருந்தோம். அந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில மாநிலங்கள் தங்களை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளனர். அதனால், தங்களது அடையாள ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுகிறோம். சேலம் மாவட்ட நிர்வாகம் தங்களை தமிழகத்தில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்று சான்று அளித்து தங்களை அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சூரியூர் கிராம விவசாயிகளின் இந்த கோரிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதேபோன்று சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள டி பெருமாபாளையம் பகுதியில் திருநாவுக்கரசு மற்றும் அவரது சகோதரர் கிருபாகரன் ஆகிய இருவரும் கந்துவட்டி மற்றும் ரவுடிசம் செய்து கிராம மக்களை மிரட்டி வருவதாக கூறி, 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் ரவீந்திரன் கந்துவட்டி கொடுத்து மிரட்டி வருவதை தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அவரை திருநாவுக்கரசு மற்றும் கிருபாகரன் ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கியதில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குற்றம்சாட்டினர். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே நேரத்தில் நடந்த இரு வேறு முற்றுகையால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.