EPS Vs Vijay: தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் - விஜய்க்கு இபிஎஸ் பதிலடி

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள், புதிதாக தொடங்கியுள்ள கட்சியினர் கூட பாராட்டும் அளவிற்கு ஆட்சி நடத்தியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

Continues below advertisement

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா ஓமலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் மோரினை வழங்கினார்.

Continues below advertisement

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு தமிழகம் முழுவதும் கோடை காலங்களில் வெளியூரிலிருந்து வரும் பொதுமக்கள் குடிநீருக்கு அவதிப்படாமல் இருக்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நகரம் மற்றும் கிராமங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்படும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடப்பது தொடர்கதையாகி உள்ளது. இந்த நிலையில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் திறமையற்ற முதலமைச்சராக இருப்பதாகவும் குறை கூறினார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும்தான் போட்டி என நடிகர் விஜய் பேசி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர், அது அவருடைய கருத்து. ஒவ்வொரு கட்சித் தலைவரும் கட்சி வளர்ச்சிக்காகவும் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பார்கள் என கூறினார். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என்பதை மக்களே ஏற்றுக்கொண்டு பிரதான எதிர்க்கட்சி என்கிற அங்கீகாரத்தை கொடுத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிமுக குறித்தும், அதிமுக தலைவர்கள் குறித்தும் நடிகர் விஜய் விமர்சிக்காதது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள், புதிதாக தொடங்கியுள்ள கட்சியினர் கூட பாராட்டும் அளவிற்கு ஆட்சி நடத்தியுள்ளார்கள். அதனால் தான் யாராலும் விமர்சிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று இருப்பது குறித்த கேள்வி, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola