சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, ஓபிஎஸ் பற்றி எந்தவித கேள்விக்கும் இனி பதில் இல்லை. அவரைப் பற்றி கேள்விக்கு எந்த பதிலளித்தாலும் திரித்து செய்தி வருகிறது என தெரிவித்தார்.


சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐஜியை மாற்றினால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்து விடாது. நிர்வாகம் சரியாக இருந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கை காக்கமுடியும்‌. இன்றைக்கு காவல்துறை பொறுப்பை முதலமைச்சர் வகித்து வருகிறார். சரியான முறையில் திறமையாக செயல்படுத்தி இருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டு இருக்கும். பொம்மை முதலமைச்சர், திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தால் காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது. அதனால் முழுமையாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கின்ற நிலை இல்லை. அதனால் காவல்துறையினரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது. குறிப்பாக கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடந்த வண்ணம் உள்ளது. எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்யமாக இருந்து வருகிறது. இதை ஒடுக்க வேண்டும் என்றால் காவல்துறையிற்கும் முழு சுதந்திரம் வழங்கப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு ரவுடிகளை அடக்க முடியும் என்றார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி பொறுப்பாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.


நிர்வாகம் சரியாக இருந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கை காக்கமுடியும்‌ - இபிஎஸ் கடும் விமர்சனம்


மேலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார். இந்த கொலை திட்டமிட்டு தான் அரங்கேற்றி உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர். கைது செய்யப்படவில்லை. அவர்கள் உண்மையான குற்றவாளி அல்ல. போலி குற்றவாளி. எனவே உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். உண்மை குற்றவாளி குறித்த சந்தேகங்களை போக்குவது அரசின் கடமையாகும் எனவும் தெரிவித்தார்.


திறமையற்ற முதலமைச்சர் ஆண்டு கொண்டு இருக்கிறார். அனைத்து இலாக்காக்களும் தேய்ந்து போய் இருந்து வருகிறது. எந்த துறையிலும் வளர்ச்சி கிடையாது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. இதற்கு தீர்வு காண திமுக ஆட்சியிலும் திறமை இல்லை எனவும் விமர்சனம் செய்தார். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரவில்லை.


திமுகவின் கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் தான் தெரியும். எல்லாம் உட்கட்சி பிரச்சினை, பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று நினைக்கிறேன். அவருடன் ஒற்றுமை கிடையாது. இங்கு மட்டும் இல்லை, காஞ்சிபுரத்திலும் இவ்வாறு தான் இருந்து வருகிறது என்றார். இதனிடையே குழப்பத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி என்று இபிஎஸ்? என்று கேள்வி எழுப்பினார்.



ஓபிஎஸ் குறித்து கேள்விக்கு, வெளியேற்றப்பட்டவர்கள் குறித்த கேள்வி கேட்டால் விறுவிறுப்பான செய்திக்காக எங்களிடம் பதில் எதிர்பார்க்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது அவரை எதிர்த்த முன்னாள் நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் இணைக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு? மற்றவர்கள் எல்லாம் கட்சி அலுவலகத்தை உடைக்கவில்லை, கட்சிக்காரனை அடிக்கவில்லை, கட்சி வாகனத்தை நொறுக்கவில்லை,எந்த பொருளையும் தூக்கிச் செல்லவில்லை என்று பதில் அளித்தார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி ஆய்வு செய்து வருகின்றனர் குறித்த கேள்விக்கு, செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அதிமுகவின் பெயர் வர வேண்டும் என்பதற்காக வேண்டுமேன்றே திட்டமிட்டு அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு போடுவதற்காக ஜோடிக்கப்பட்ட வழக்காக தான் பார்க்கப்படுகிறது இது உண்மை அல்ல எனவும் தெரிவித்தார்.