மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் மூலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி என டெல்டா உள்பட 11 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. இதனால் காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4 முறை நிரம்பியது. 

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 10ல், அணைக்கு வினாடிக்கு, 9,200 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று முன்தினம், 8,776 கனஅடியாக சரிந்தது. அதற்கேற்ப வினாடிக்கு, 14,500 கனஅடியாக இருந்த அணை பாசன நீர் திறப்பு, நேற்று முன் தினம் காலை, 7,500 கன அடி யாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் கர்நாடகா எல்லையில் பெய்த மழையால் நேற்று காலை மேட்டூர் அணை நீர்வரத்து வினா டிக்கு, 16,288 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, 7,500 கனஅடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக தொடர்கிறது

 தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று மாலை, 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையால், கர்நாடகாவிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியாற்றில் திறக்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கன அடியாக தொடர்கிறது. இதனால், ஒகேனக்கல் மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் மெயின் பால்ஸில் குளித்தும், பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.