பதவி விலகுபவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளிட்ட எந்த தேர்தலிலும்  நிற்க முடியாத வகையில் கட்சி தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Continues below advertisement

திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சேலம் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத்தின் தலைவர் கீ. வீரமணி கலந்து கொண்டார். பொதுக்குழு கூட்டத்தில், திமுகவுடன் திராவிடர் கழகத்திற்கு உள்ள உறவு தாய் பிள்ளை உறவு, அந்த உறவு தொடர்ந்து இருக்கும். அதே நேரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் யாராயினும் உள்ள கொள்கையளவில் ஆதரவு தொடரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Continues below advertisement

மேலும், ஜாதி வாரி கணக்கெடுப்பை முழுமையாக செய்ய வேண்டும். தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை விட்டுவிட்டு பதவிக்காகவும் பணத்துக்காகவும் வேறு பல சுயநல காரணங்களுக்காகவும் ஒருசில நாட்களிலேயோ, மாதங்களிலேயோ பதவியை விட்டு விலகி வேறொரு கட்சியில் இருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு பதவியை பிடிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு பதவி விலகுபவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் அவர்கள் நிற்க முடியாத வகையில் கட்சி தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். மேலும், ஆணவ படுகொலை தடுக்கும் சட்டத்தை விரைவாக கொண்டு வர வேண்டும் என உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி, “தமிழகத்தில் தொங்கு சட்டசபை வந்திருந்தால் என்ன நிலை வருமோ அதே நிலைதான் தற்போது உள்ளது. வட மாநிலங்களில் நடக்கும் கட்சி தாவல்களின் தாக்கம்தான் தற்போது தமிழகத்தில் நடக்கிறது. இந்தியாவில் முதல் முதலில் கட்சி தாவலை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். தவெக ஆட்சி அமைத்தபிறகும் கூட, பதவி ஆசைக்காக பலர் கட்சி தாவுகிறார்கள். பல்வேறு குற்ற வழக்குகளில் உள்ளவர்களை எல்லாம் கட்சியில் இணைப்பது என்பது அவர்கள் ஏற்கனவே தெரிவித்த மாற்று அரசியலுக்கு முரணானது. சமுதாயத்தை அழிக்கும் மத, ஜாதி, பதவி, அதிகாரம், சினிமா போதையை ஒழிக்க திராவிடர் கழகம் சார்பில் இளைஞர்களை வைத்து போராட்டம் நடத்த உள்ளோம். ஆளுநருக்கும் வைகைக்கும் எந்த சம்பந்தமில்லை. காந்தியை கோட்சே ஒருமுறைதான் சுட்டார். ஆனால், இவர்கள் பலமுறை சுட்டுகொண்டே இருக்கிறார்கள். காந்தி இடத்தில் தற்போது ராம்ஜி வந்துள்ளார். கட்சி தாவலை விட தற்போது கட்சியை உடைக்க பார்க்கிறார்கள். முதலில் கட்சியை இணைக்க பார்க்கிறார்கள் முடியவில்லை என்றால் பிறகு கட்சியை உடைக்கிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.