சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.



முதல்வர் வருகை:


இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 20 ஆம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையம் வந்தடைகிறார். சேலம் விமான நிலையம், ஓமலூர், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் முதல்வருக்கு திமுகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். வரவேற்பை ஏற்றுக்கொண்டு சாலை மறுவகமாக பெத்தநாயக்கன்பாளையம் மாநாடு நடைபெறும் இடத்தை முதல்வர் பார்வையிடுகிறார். இதைத் தொடர்ந்து, சென்னையில் இன்று தொடங்கிய இளைஞர் அணி மாநில மாநாடு சுடர் ஓட்டம் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தச் சுடர் ஓட்டமானது செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக இருபதாம் தேதி மாலை இளைஞர் அணி மாநாடு திடல் வந்தடையும். இதனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரிடம் வழங்க உள்ளார். இதனைத் தொடர்ந்து மாநாடு திடல் அருகில் ட்ரோன் ஷோ (Drone Show) நடைபெற உள்ளது. இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்கள். 



நிகழ்ச்சி நிரல்:


திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு 21ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மாநாடு பந்தல் அருகில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க‌.ஸ்டாலின் கொடிக்கம்பத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், நிகழ்ச்சி தொடங்கி வைத்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேச உள்ளார். அவரைத் தொடர்ந்து 22 பேச்சாளர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சமத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். இது மட்டும் இன்றி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டிமன்றம், இசைக் கச்சேரி, நடனம், நாடகம் என பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி தலைமை உரையாற்ற உள்ளார். அவரைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உரையாற்ற உள்ளனர். இறுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற உள்ளது. 


திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கு பெற உள்ளதால் சேலம் மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் சேலம் மாவட்ட காவல்துறை ஆங்காங்கே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.