'தமிழ்நாட்டில், திமுகதான் பாஜகவை பிரதான எதிர்கட்சியாக உருவாக்குகிறது' - அண்ணாமலை

”மேகதாது பிரச்சினையில் தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு பாஜக ஆதரவு...”

Continues below advertisement

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடான சந்திப்பு நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மலைவாழ் மக்களின் இடையே உரையாற்றிய அண்ணாமலை, இயற்கை வளங்களை பாதுகாக்கும் மலைவாழ் மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமரின் வனபந்து யோஜனா திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பு முதல் முனைவர் படிப்பு வரை மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மலைவாழ் மக்களுக்கான கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.  மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.26,135 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலைவாழ் இளைஞர்கள் 100 பேர் கொண்ட குழுவாக வந்தால் அவர்களுக்கான காபி பயிர் விற்பனை இயக்கத்தை ஏற்காட்டில் ஏற்படுத்தித் தருவோம் என்றார்.

Continues below advertisement

 

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ”நெல் உள்ளிட்ட 14 விளைபொருளுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தி இருப்பது விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 2014-ம் ஆண்டில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தபிறகு, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, உற்பத்தி செலவை விட 50 முதல் 100 சதவீதம் விலை இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

நெல்லுக்கு மட்டும் கடந்த 8 ஆண்டுகளில் 58 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் விலையை உயர்த்தி விவசாயிகளின் பாதுகாவலராக பிரதமர் மோடி திகழ்கிறார் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மேகதாது பிரச்சினையில் அணை கட்டப்படக் கூடாது என்பதுதான் தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. மேகதாது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் துணை நிற்கிறோம் என ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எழுத்துபூர்வமாக உறுதி அளித்துள்ளோம். சட்டம் தெளிவாக உள்ளது.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டி விட முடியாது. மேகதாதுவை பொறுத்தவரை பாஜக தான் முதலில் கையில் எடுத்தது. தஞ்சாவூரில் உண்ணாவிரதம் இருந்தோம். காவிரிக்கு கீழே வரக்கூடிய மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது. தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் பாரதிய ஜனதாக் கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும். தமிழகத்தில் 38 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் கெளரவ நிதித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

100 சதவீதம் சிறு குறு விவசாயிகளுக்கு பிரதமரின் கெளரவ நிதித் தொகை சென்று சேர வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணமாக உள்ளது. இது மாநில அரசின் வேளாண்மை துறையின் கையில் உள்ளது இதற்காக ஒரு சிறப்பு முகாமினை ஏற்படுத்தி தமிழகத்தில் உள்ள ஒரு சிறு விவசாயி கூட விடுபடாமல் இருக்க முதலமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும். அரசியல் எல்லாம் தாண்டி முதலமைச்சருக்கு எங்களுடைய வேண்டுகோளாக வைக்கிறோம். முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.

 

மதுரை ஆதினம் மீது அமைச்சர் சேகர்பாபு கங்கணம் கட்டிக் கொண்டு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மதுரை ஆதினத்தை பொறுத்தவரை அவர் எந்த இடத்திலும் தமிழக அரசை விமர்சித்து பேசவில்லை. மாநில அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் வரக்கூடாது என்று தான் மதுரை ஆதினம் கூறினார். முதலமைச்சரையோ, அமைச்சரையோ அவர் விமர்சித்து பேசவில்லை. அவருடைய கருத்தை சொல்வதற்கு மதுரை ஆதினத்திற்கு முழு உரிமை இருக்கிறது. எதுவும் சொல்லக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறுவதை ஏற்க முடியாது. மிரட்டியும் வருகிறார். தமிழகத்தில் புகார் சொன்னால் வழக்கு என்பது புதிது கிடையாது.

மின்சாரம் இல்லை என்று சொன்னால் வழக்கு, ஊழல் குற்றச்சாட்டு சொன்னால் வழக்கு என்கிறார்கள்.இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்.  தமிழக அமைச்சர்கள் மீது சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. அடுத்த கட்ட ஆதாரங்களை வெளியிட பாஜக தயாராக உள்ளது. வழக்கு என்று மிரட்டினால் தப்பித்திட முடியாது. இந்த குற்றச்சாட்டின் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும், ஊழல் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக  டிஜிபியிடம் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் புகார் கொடுத்துள்ளோம். எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வழக்கு போட்டு வாயை அடைக்கலாம் என நினைத்தால் அது தவறாகவே முடியும்.

 

கோவில், மசூதி, தேவாலாயம் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதே பாரதிய ஜனதாக் கட்சியின் கருத்தாக உள்ளது. சாதாரண மனிதனுக்கு இந்து சமய அறநிலையத்துறையினால் எந்தவித பயனும் கிடையாது. கோவில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை குழுவாக அமைத்து நிர்வகிக்கலாம். இது அனைது மத வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும். தமிழகத்தில் யார் பிரதான எதிர்க்கட்சி என்பது முக்கியம் கிடையாது. இது மக்கள்தான் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் உண்மைகளை கொண்டு செல்வதால் பாரதிய ஜனதாக் கட்சியை வளர்த்து வருகிறார்கள். அதேநேரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் நோக்கம் ஆளுங்கட்சியாக ஆக வேண்டும் என்பதுதான்.

3-வது கட்சியாக வருவதற்கு யார் வேண்டுமானாலும் சண்டை போட்டுக் கொள்ளலாம். முதல் கட்சியாக வருவதற்கு உழைத்து கொண்டிருக்கிறோம். சத்திய பிரமாணம் செய்து அமைச்சராக உள்ளவர்கள் பேசும்பேச்சு சாமான்ய மக்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. கட்சியையோ தனிநபரையோ நாங்கள் எதிர்க்கவில்லை. கொள்கையைத்தான் எதிர்க்கிறோம். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. ஊடகங்கள் பெருகிவிட்ட சூழலில் ஊழல்கள் உடனுக்குடன் வெளி வருகின்றன.

தொழில்நுட்ப உலகில் ஊழலை மறைத்து விடமுடியாது. எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை ஊர்ஜிதம் செய்த பின்னரே நாங்கள் குற்றச்சாட்டுகளை வெளியிடுகிறோம். பட்டியலை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுதான் இருப்போம். முதல் பட்டியலை வெளியிட்டவுடன் வழக்கு போட்டால் பயந்து விடுவார்கள் என திமுக தப்புக் கணக்குப் போட்டால் அடுத்த பட்டியல் இதைவிட 10 மடங்கு அதிகமாக வெளியிடுவோம்” என்று தெரிவித்தார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola