தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இன்று முதல் சேலம் கோட்டத்தில் இருந்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், ஆங்கில புத்தாண்டு, நவராத்திரி விழா, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை வரும் நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, வரும் 12 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்து கழக கோட்டங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சேலம் கோட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இன்று முதல் முதல் 15 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஒசூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம் மற்றும் பெங்களூருக்கும், பெங்களூருவிலிருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், ஓசூரிலிருந்து சென்னை, சேலம், புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரூக்கும் என 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊர்களில் இருந்து பணிக்கு செல்பவர்கள் பணிக்கு திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படுகிறது. மேலும், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகர பகுதிகளில் அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் டவுன் பஸ் வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் மற்றும் ஆப் வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது என சேலம் கோட்ட போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, தீபாவளி பண்டிகையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால், சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், மங்களூரில் இருந்து சேலம் வழியே தாம்பரத்திற்கு ஒரு வழித் தட சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மங்களூரு - தாம்பரம் சிறப்பு ரயில் (06063) வரும் 12, 19, 26 ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது. மங்களூரில் காலை 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காசர்கோடு, கண்ணூர், தலச்சேரி, கோழிக்கோடு, திரூர், பாலக்காடு வழியே போத்தனூருக்கு மாலை 5.50 க்கும், திருப்பூருக்கு மாலை 6.40 க்கும், ஈரோட்டிற்கு இரவு 7.45 க்கும் வந்து சேலத்திற்கு இரவு 9 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், 2 நிமிடத்தில் புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியே தாம்பரத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 5.10 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.