தருமபுரியில் 2022-23ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று துவக்கி வைத்து, வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2022-23ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை குழு விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, வீரர்களுக்கான தன்னம்பிக்கை தீபம் ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். அதனை அடுத்து இப்போட்டியில் கலந்து கொண்ட வீரர்களை ஆட்சியர் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். 



 

மேலும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு ஊழியர்கள் மாற்றுத் திறனாளிகள் என கலந்து கொள்ளும் இந்த  போட்டிகளில் பள்ளி மாணவர்கள் 4505 பேரும், மாணவிகள் 1359 பேர் என மொத்தம் 5864 நபர்கள் இப்போட்டிக்காக பதிவு செய்துள்ளனர். கைப்பந்து, கால்பந்து, கபடி, கூடைப்பந்து, தடகள போட்டிகள் என இந்த மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது.

 

தருமபுரி மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா 3000 ரூபாயும், இரண்டாம் பரிசாக ரூபாய் 2000, மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். 

 

மேலும் மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக 75000, மூன்றாம் பரிசாக ஐம்பதாயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல் குழு போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு வீரர்களுக்கும் முதல் பரிசாக ஐம்பதாயிரம், இரண்டாம் பரிசாக 37,500, மூன்றாம் பரிசாக இருபத்தி ஐயாயிரம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.



 

முதலமைச்சர் கோப்பை போட்டிகளின் மொத்த பரிசு தொகை ரூ.25 கோடி ஆகும். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் தீபா விஸ்வேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், நகர மன்ற தலைவர் லட்சுமி மாது, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.