தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சிவ ஸ்தலமாக அமைந்துள்ள இந்த கோவிலில், மலையின் உச்சியில் ஐந்து வகையான திர்த்தங்கள் வருகின்றன. இந்த கோவிலுக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் பொதுமக்களுக்கு குடிநீர், கழிவறை மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். சுற்றுலா தளமாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக சுற்றுலாத்துறை மூலம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்துவதற்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது மலை உச்சியில் உள்ள கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் சுமார் 2 கி.மீ அதிகாரிகளுடன் நடந்து சென்ற மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, கோவிலுக்கு வந்து செல்லும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்பொழுது பொதுமக்கள் மலை மீது ஏறுகின்ற பாதையில் மூன்று இடங்களில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிப்பறைகளை செய்து தர வேண்டும். அதேபோல் மலை உச்சியில் உள்ள கோயிலில் குளித்துவிட்டு, பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றை செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்ஷினி, ”தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் சுற்றுலா துறை மூலம் மேம்படுத்துவதற்கான பணிகள் குறித்து ஆய்வு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மலைப் பாதையில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யவும், மலைக்கோயிலில் பெண்கள் உடை மாற்றும் அறை கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் உடனடியாக செய்து தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மலைக் கோவிலுக்கு செல்ல ரோப்கார் வசதி வேண்டும் என நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். தொடர்ந்து ரோப் கார் வசதி செய்வது குறித்து தமிழக அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: அரசியல் கட்சியா? ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகியது இதற்காகத்தான்.. மனம் திறந்த சகாயம்!