சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் தூக்கிலிடப்பட்ட சங்ககிரி மலைக் கோட்டையில் அவரது உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தீர்த்தகிரி என்ற இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார். இளமையிலேயே பல்வேறு வித்தைப் பயிற்சிகளை இளைஞர் படைகளோடு உருவாக்கி வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் ஆகியோரோடு சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு பல்வேறு போர்களில் வெற்றிவாகை சூடியவர். கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக போர் புரிந்து வந்த இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு, சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று தூக்கிலிடப்பட்டார்.
அவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஆடிப்பெருக்கு தினத்தன்று தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையில், தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்தில், அவரின் திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு தீரன் சின்னமலை திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று, சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு சின்னம் அமைந்துள்ள பகுதியில் மரியாதை செலுத்த வர இருப்பதால் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவினைப் போற்றிடும் வகையில் சங்ககிரி - திருச்செங்கோடு - பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவுச் சின்னம் மற்றும் சங்ககிரி கோட்டையில் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.