தருமபுரி அடுத்த சோகத்தூர் ஏரி, தருமபுரி மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரி. இந்த ஏரிக்கு பஞ்சப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரின் மூலம் தண்ணீர் வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. மேலும் போதிய மழை இல்லாததாலும், ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் தூர்வாரப்படாமல், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும், ஏரி வறண்டு காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்பே நிரம்பி உபரி நீர் வெளியேறி வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் வெளியேறி வருகிறது. இதனால் பஞ்சப்பள்ளி அணையின், பாசன ஏரிகள் மட்டுமல்லாமல், உபரி நீர் மூலம் நிரம்பும் ஏரிகளும், நிரம்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சோகத்தூர் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு, சோகத்தூர் ஏரி முழுவதும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது.


இதனைக் கண்ட சோகத்தூர் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து ஏரி கோடியில், மலர் தூவி, சிறப்பு பூஜை செய்து ஆடு வெட்டி வழிபாடு செய்தனர். மேலும் இந்த சிறப்பு பூஜையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடகம் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு ஏரி கொடியில் மலர் தூவி தூவினர். மேலும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சோகத்தூர் ஏரி நிரம்பி இருப்பதால், சுற்றுவட்டார பகுதி மக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

------------------------------------

தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக தொடர்பு மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழையால் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,  நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.



இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து நண்பகலில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகர் பகுதி, ஆட்சியர் அலுவலகம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, குண்டல்பட்டி, கடத்தூர், மொரப்பூர், அரூர், நரிப்பள்ளி, கோட்டப்பட்டி,  சிட்லிங், சித்தேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது. மேலும் இடைவிடாது மழை பெய்து வந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.