தருமபுரியில் போக்குவரத்து விதிமுறைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு காவல்துறையினருடன் இணைந்து பட்டாசு கிப்ட் வழங்கி வாழ்த்திய தன்னார்வலர்கள்.

 

தருமபுரி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து விதிகளை கடைபிடித்து,  இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இதன் மூலம் விபத்துகளை குறைக்க முடியும் என காவல் துறையினர், போக்குவரத்து காவலர்களும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதில் தருமபுரி நகரில் போக்குவரத்து காவலர்கள் கடந்த சில மக்களுக்கு முன்பு கிராமிய நாடக கலைஞர்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து தினம் ஒரு நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



 

இன்று தருமபுரி போக்குவரத்து துறை மற்றும் மை தருமபுரி தன்னார்வலர்கள் இணைந்து 4 ரோடு சந்திப்பு சாலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களிடம், தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்பொழுது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து செல்பவர்களை கண்டறிந்து, அவர்களை பாராட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி தலைமையில், மை தருமபுரி தன்னார்வலர்கள் தீபாவளிக்கு பட்டாசு பாக்ஸ் கிஃப்ட் வழங்கி அவர்களை பாராட்டினர். அப்பொழுது அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து வந்த முதியவரை நிறுத்தி போக்குவரத்து காவலர்கள் பாராட்டி பட்டாசு பாக்ஸை வழங்கினர் ஆனால் அந்த முதியவர் பட்டாசு பாக்ஸ் வேண்டாம் என கூறி, வாங்க மறுத்து விட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புது முயற்சி மேற்கொண்ட காவலர்களை பாராட்டிவிட்டு சென்றார். 



 

மேலும் தலைகவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது, 4 சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்கக்கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கினர். மேலும் தினந்தோறும் தருமபுரி நகரில் போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து மை தருமபுரி தன்னார்வலர்கள் வெவ்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் சதீஸ்குமார், மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர் விழிப்புணர்வாளர்கள் டாக்டர் ஜாபர், வழக்கறிஞர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் விபத்துகளை தடுக்க, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பட்டிசு கிஃப்ட் வழங்கிய போக்குவரத்து காவல் துறையினரின் இந்த செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றது.