தருமபுரி: தேதியை தவறாக சொன்னதால் மனைவியை கத்தியால் குத்திய ஆசிரியர்

’’தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் செந்தில்குமார் தேநீர் கொடுத்த டம்ளரை எடுத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்’’

Continues below advertisement
தருமபுரி செந்தில் நகர் நண்பர்கள் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார், கிருஷ்ணகிரி மாவட்டம் இம்மிடிநாய்க்கனஹள்ளி அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்தமிழ்செல்வி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் செந்தில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை தூங்கி எழுந்த ஆசிரியர் செந்தில்குமார் மனைவியிடம் இன்று என்ன தேதி என்று கேட்டுள்ளார். அப்பொழுது மனைவி முத்தமிழ்செல்வி தவறுதலாக 29 என கூறியுள்ளார். இதை தொடர்ந்து நாட்காட்டியை பார்த்த ஆசிரியர், இன்று தான் சம்பளம் வரும், நீ ஏன் தவறா சொன்ன என கேட்டுள்ளார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் செந்தில்குமார், மனைவி முத்தமிழ்செல்வியை தாக்கியுள்ளார். இதை தொடர்ந்து அருகில் இருந்த கத்தியை எடுத்து மனைவி முத்தமிழ்செல்வியின் மார்பு, முதுகு பகுதிகளில் மூன்று இடங்களில் குத்தியுள்ளார்.
 

 
இதனை அடுத்து முத்தமிழ்செல்வி அலழறியடித்து சத்தம் போட்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முத்தமிழ்செல்வியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து முத்தமிழ்செல்விக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மனைவியை கத்தியால் குத்திய ஆசிரியர் செந்தில்குமார் வீட்டிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். 
 
இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனை அடுத்து மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய ஆசிரியர் செந்தில் குமாரை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் செந்தில்குமார் தேநீர் கொடுத்த டம்ளரை எடுத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த ஆசிரியர் செந்தில்குமார் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல் துறை பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தருமபுரியில் தேதியை தவறாக சொன்ன, மனைவியை கத்தியால் குத்திய கணவர், சிறையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Continues below advertisement
Sponsored Links by Taboola