தருமபுரி நகர பகுதியில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தது. இதனால் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காவல் துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தருமபுரி நகரில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, மருத்துவமனை முன்பு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து மர்ம நபரின் அடையாளத்தை வைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பாலக்கோடு அடுத்த கடைமடை வீட்டு வசதி வாரியத்தில் குடியிருந்து வரும் பாபு (29) என்பது என தெரியவந்தது.
இதனையடுத்து தருமபுரி நகர காவல் துறையினர் பாபுவை கைது செய்து, அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வேறு எங்கெல்லாம் இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார். வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா? என்பது குறித்து பாபுவிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களூர் துறைமுகத்திலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 1312 மெ.டன் யூரியா, மற்றும் காம்ப்ளக்ஸ் சரக்கு ரயில் மூலம் இன்று தருமபுரி வந்தடைந்தது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாய சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தேவையான யூரியா, காம்ப்ளக்ஸ், தருமபுரி மாவட்டத்திற்கு எம் சி எப் நிறுவனம் சரக்கு ரயில் மூலம் வந்தடைந்தது. இதஇல் 881 மெட்ரிக் டன் யூரியாவும், 431 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 1312 மெட்ரிக் டன் வந்தது. இதனை தருமபுரி ரயில் நிலையத்திலிருந்து லாரிகள் மூலம் பிரித்தனுப்பப்பட்டது. அப்பொழுது தருமபுரி வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), தாம்சன், திடீரென ரயில் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
அப்பொழுது தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தனியார் உர விற்பனை கடைகளுக்கு ஒப்பந்ததாரர் அன்பழகன் மூலம் லாரிகளில் பிரித்தனுப்படும் பணியினை ஆய்வு செய்தனர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 481 மெட்ரிக் டன் யூரியாவும், 251 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல் தருமபுரி மாவட்டத்திற்கு 400 மெட்ரிக் டன் யூரியாவும் 180 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸும் லாரிகள் மூலம் தனியார் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தேவையான உரம் கையிருப்பில் இருக்கிறது என தருமபுரி மாவட்ட வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.