தருமபுரி மாவட்டம் பாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற இளைஞர் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து பீனிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த பீனிக்ஸ் அமைப்பின் மூலம் பூகானஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரி, அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில், பிறந்தநாள், கல்யாண நாள், தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் என கடந்த 4 ஆண்டுகளாக சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர். இந்த குழுவை சேர்ந்த அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் மரக்கன்றுகளை பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மரக்கன்றுகளுக்கு கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு வந்ததால், கிராமத்தில் உள்ள ஏரியில் பாழடைந்த கிணற்றினை பொதுமக்கள் பங்களிப்போடு தூர்வாரி சுத்தப்படுத்தினார். இதனை தொடர்ந்து ஏரியில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீரை அந்தக் கிணற்றிலிருந்து மோட்டார் வைத்து மரக் கன்றுகளுக்கு தண்ணீர் விட்டு வருகின்றனர். மேலும் 4 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் பீனிக்ஸ் குழுவினர் வைத்த மரக்கன்றுகள் தற்போது ஓரளவுக்கு மரங்களாக வளர்ந்து நிற்கிறது.
இந்த பூகானஹள்ளி ஏரியில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளில் மா, பலா, கொய்யா, நாவல் போன்ற பல வகை மரங்களும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வகையான பறவைகள் காலை, மாலை வேளைகளில் இந்த மரங்களில் வந்து அமர்ந்து பழங்களை உண்டு மகிழ்கின்றன. இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகின்ற சூழல் இருந்து வருகிறது. இதனால் இந்த பீனிக்ஸ் அமைப்பினர், இங்கு வரும் பறவைகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என எண்ணினர். அப்பொழுது பறவைகளுக்கு உணவு தண்ணீர் வைப்பதற்காக, அன்றாடம் நாம் பயன்படுத்துகின்ற மக்காத பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்த வாட்டர் பாட்டில்களை எடுத்து, அதனை இரண்டாக வெட்டி, துளையிட்டு கம்பியின் மூலம் மரத்தில் கட்டி வருகின்றனர். இதில் மேல் பகுதியையும் தானியங்கள் வைத்தும், கீழ் பகுதியில் தண்ணீரையும் ஊற்றி வருகின்றனர். இந்த பீனிக்ஸ் குழுவினர் பூகானஹள்ளி ஏரியில் உள்ள அனைத்து மரங்களிலும் வாட்டர் பாட்டில்களை கட்டி வைத்து தானியங்களையும், தண்ணீரை வைத்து வருகின்றனர். இதனால் இந்த பகுதிக்கு வருகின்ற பறவைகள் மரத்தில் அமரும் பொழுது, இங்கே கட்டி வைக்கப்பட்டுள்ள தானியங்களை உணவாக எடுத்துக் கொண்டு, தண்ணீரையும் குடித்து விட்டுச் செல்கின்றது. தொடர்ந்து தினமும் மரக்கன்றுகளை பராமரித்து வரும் ஃபீனிக்ஸ் குழுவினர், பறவைகளுக்கு வைக்கப்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் குறைவாக இருந்தால், அதனை மீண்டும் நிரப்பி விட்டு செல்கின்றனர். கோடை காலத்தில் மனிதர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதால், பறவைகள் உணவு மற்றும் தண்ணீருக்கு எங்கே செல்லும் என்ற நல்லெண்ணத்தில் இந்த பீனிக்ஸ் குழுவினர் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை வைத்து வருகின்றனர்.
மேலும் சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், இயற்கையான காற்றை சுவாசிக்கவும், அதிக மழை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வரும் இந்த பீனிக்ஸ் குழுவினர், தற்போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் பவகையில் தூக்கி எறியப்படுகின்ற பிளாஸ்டிக் வாட்டர் கேன்களின் மூலம் பறவைகளின் பசியையும் தாகத்தையும் போக்கி வருகின்றனர்.