தருமபுரியில் அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மிகப் பெரிய பட்டுக்கூடு அங்காடி என்பதால், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்காக எடுத்து வருகின்றனர். தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் தினசரி 5 முதல் 10 டன் வரை பட்டுக் கூடுகள் விற்பனைக்கு வருகிறது. ஆனால் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா பரவல் காரணமாக, வெளியூர் விவசாயிகள் வராததால், பட்டுக்கூடு வரத்து சரிந்தும், விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், வெளியூர் விவசாயிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

 



 

இந்நிலையில் ஈரோடு, கோபி, உடுமலை, கோவை, பழனி, தாராபுரம், வேலூர், தஞ்சாவூர், தென்காசி மற்றும் ஆந்திரப் பகுதிகளில் இருந்து பட்டுக்கூடு சுழற்சி முறையில் தினசரி விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கால், பட்டுக் கூடு வரத்து நின்றிருந்தது. தற்பொழுது கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் விவசாயிகள் வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தருமபுரி பட்டுக்கூடு அங்காடிக்கு உடுமலை, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2 டன் பட்டுக் கூடுகளை 20 விவசாயிகள் எடுத்து வந்தனர். இந்த ஏலத்தில் ஒரு கிலோ பட்டு கூடு விலை அதிகபட்சமாக 568  ரூபாய்க்கும் குறைந்த பட்சமாக 466 ரூபாய்க்கும், சராசரியாக 524 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.



 

நேற்றைய ஏலத்தில் பட்டு நூற்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு, பட்டு கூடுகளை ஏலம் எடுத்தனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு பிறகு பட்டுக்கூடு விலை அதிகரித்து 568 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பட்டுக்கூடு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளியூர் விவசாயிகள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பட்டுக்கூடு விலை அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக பட்டுக்கூடு விலை ஓராண்டுக்கு பிறகு விலை உயர்ந்து இருக்கிறது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெளியூர் விவசாயிகள் வரத் தொடங்கி இருப்பதால், பட்டுக்கூடு வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது  என பட்டுக் கூடு அங்காடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.