தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பணாடிகை அனைவரது இல்லங்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழக முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதுபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதனை  தொடர்ந்து  தருமபுரி மாவட்ட நிர்வாகம், நல்லம்பள்ளி அருகே உள்ள  வெள்ளக்கல் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் அரசு அலுவலகங்கள் பொங்கல் பானையில் பச்சரிசியிட்டு பொங்கல் வைத்தனர். அதனை தொடர்ந்து பொங்கல் விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி கலந்து கொண்டு சமத்துவபுரத்தில் உள்ள மக்களோடு சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக படையலிட்டு குழந்தைகளுக்கு பொங்கலை வழங்கி கொண்டாடினார். மேலும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான கோலப்போட்டி, லெமன் ஸ்பூன்  மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் வட்டாட்சியர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள் சமத்துவபுரம் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

 
காரிமங்கலம் அருகே மகளிர் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாடினார்.
 
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் விடுமுறைக்கு முன்பாகவே பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மகளிர் கல்லூரியில் இன்று தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் கல்லூரி மாணவிகள், தமிழர் பாரம்பரிய உடை அணிந்து,  புது மண் பானை வைத்து, பொங்கல் வைத்தனர். ஒரே இடத்தில் 50 பானைகள் வைத்து, செங்கரும்புகளை பொங்கல் வைத்து, பொங்கியவுடன், பொங்கலோ, பொங்கல் என ஓங்காரமிட்டனர். இதனை அடுத்து மாணவ மாணவிகள் அனைவருக்கும்  பொங்கல் வழங்கப்பட்டது.  இதனையடுத்து மாணவிகளுக்கு கோலப்போட்டி, கோணிப்பை ஓட்ட போட்டி, இசை நாற்காலி, உரி அடித்தல், பல்லாங்குழி ஆடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.  இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் மாணவ, மாணவிகள், அனைத்து துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பொங்கலை கொண்டாடினர்.