தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறைக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் காவலர்கள் பயன்படுத்துகின்ற சீருடை, தலைக்கவசம் உள்ளிட்ட பல்வேறு வகையான உபகரணங்களை ஆண்டுதோறும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வில் சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் ஆய்வு செய்தார். அப்பொழுது இந்த ஆய்வில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டு, காவல் துறையினரின் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள், நடமாடும் கழிவறை வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அப்பொழுது நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகள், சைரன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து லாரிகள் மற்றும் வஜ்ரா வாகனங்களை உள்ளே ஏறி ஆய்வு செய்தார். இதையடுத்து காவல் துறையினர் பயன்படுத்துகின்ற சீருடை,லத்தி, தொப்பி, தலைக்கவசம், சிறு குறிப்பு பதிவேடு, தண்டனை பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது தடுப் காவலர்கள் பணியின் போது அணியும் தலைக்கவசம் அணியை செய்து ஆய்வு செய்தார். இதன் பிறகு காவலர்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்கின்ற காவலர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும், தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவலர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த ஆய்வில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், அகவிலைப்படி, பழைய ஓய்வூதியம், சரண்டர், வரையறுக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, தற்போதைய முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் இன்று ஓராண்டுகளுக்கு மேலாகியும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக் காலமாக மாற்றி வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு பணியில் உள்ள 6 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தைச் சார்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.