தருமபுரி நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் தள்ளு வண்டியில் கடை நடத்தும் தொழிலாளர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி ஊழியர் தனிப்பட்ட முறையில் 1000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

 

தருமபுரி நகராட்சிக்கு சொந்தமான முக்கியமான மக்கள் சந்திக்கும் பகுதிகளில் அதிகளவு தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். இந்த வியாபாரிகளிடம் நகராட்சி சார்பில் சுங்கவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட சிறு தள்ளுவண்டி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்  வைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்த வியாபாரிகள் முறையாக அரசு பதிவு பெற்று,  மத்திய, மாநில அரசுகளிடம் உரிமம் (Licence) பெற்று முறையாக வரி செலுத்தி செயல்பட்டு வருகிறார்கள். இச்சங்கத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட சாலையோரமாக வியாபாரம் செய்யும் தொழிலாளர்களும், தள்ளு வண்டி வைத்து வியாபாரம் செய்யும் தொழிலாளர்களும் இச்சங்கத்தில் இணைந்து தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் (RI) ஜெயவர்மன், என்பவர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் கடை வைத்துள்ள வியாபாரிகளிடம்,  பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் கடைகள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இடையூறு இல்லாமல் சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்து கொள்ளுங்கள் எனக் கூறி வியாபாரிகளிடம் பகிரங்கமாக மிரட்டி, மாதந்தோறும் தனக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுங்கள் என கேட்டுள்ளார். மேலும் இந்த ரோடு தனியாருக்கு சொந்தமான இடம் ஆகவே இந்த இடத்தில் நீங்கள் கடை வைக்க வேண்டுமென்றால் மாதத்திற்கு ஒரு தள்ளுவண்டிக்கு ரூ.1000/- வீதம் தனக்கு பணம் தரவேண்டும். இந்த பணம் உயரதிகாரிகள் வரை சென்று பிரித்து எடுத்துக் கொள்வார்கள் என்று கூறி பகிரங்கமாக பணம் தர சொல்லி மிரட்டி வருகிறார். இல்லையென்றால் கடை வைக்க அனுமதி தரமுடியாது என்றும் மிரட்டுகிறார். 



 

இதனால் மனமுடைந்த தள்ளுவண்டி வியாபாரிகள் நகராட்சி ஆணையாளரிடம் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் புகார் அளிக்க வெவ்வேறு அலுவலர்கள் பெயரை சொல்லி வியாபாரிகளை அலைக்கழிக்க வைத்துள்ளனர்.  இதனால் மனம் உடைந்த தள்ளுவண்டி கடை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும் தள்ளுவண்டி கடை வியாபாரிகள் இடையூறு இல்லாமல் தொழில் செய்வதற்கு மாவட்ட  ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் வாழ்வாதாரத்தை பறிக்க நினைத்து தங்களிடம் பணம் கேட்டு மிரட்டும் மேற்படி (RI) ஜெயவர்மன் என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை மனுவை  வழங்கினர்.