அரூர் அருகே அதிகாலை பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் கோழிப்பண்ணை முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில், 5000 கோழிகள், 250 தீவன மூட்டைகள் என முழுவதும் எரிந்தது சாம்பலானது.
தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் கல்வராயன் மலை அடிவாரத்தில் சூறைக்காற்றுடன், இடி மின்னலோடு மாலை நேரங்களில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பெய்த மழையின் போது, மின்னல் தாக்கியதில், சிட்டிலிங் அடுத்த மலைதாங்கி கிராமத்தில் உள்ள திருப்பதி என்பவரின் கோழிப் பண்ணையில் தீப்பிடித்தது. இந்த தீ கோழிப் பண்ணை முழுவதும் பரவியதில், கோழிப் பண்ணையில் இருந்த 5000 க்கு மேற்பட்ட கோழிகளும், 250 மூட்டை கோழி தீவனமும் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் கோழி பண்ணை மற்றும் கோழி குஞ்சுகள் வளர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதனைக் கண்ட திருப்பதி அதிகாலை, அரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் கோழிப்பண்ணை முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இதனை அடுத்து அரூர் வட்டாட்சியர் பெருமாள் தலைமையிலான வருவாய் துறையினர் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த கோழி பண்ணையை பார்வையிட்டு கணக்கீடு செய்தனர். இந்த தீ விபத்தில் 5000 க்கும் மேற்பட்ட கோழிகள், 250 மூட்டை கோழி தீவனம், கோழிக்குஞ்சு வளர்ப்பதற்கான பெட்டிகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானதில், கோழி பண்ணை விவசாயிக்கு சுமார் ரூ. 20 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக விவசாயி திருப்பதி வேதனை தெரிவித்துள்ளார்.